தென் மாவட்டங்களில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் எலும்பு புற்றுநோய் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் எலும்புகளை மாற்றி வைப்பதற்கு சென்னையில் மட்டுமே எழும்பு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எலும்பு வங்கி அமைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. அப்படியான நிலையில், முதல்கட்டமாக தென் மாவட்டங்களில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீ விபத்து மற்றும் அவரச சிகிச்சை கட்டட முதல்மாடியில் கட்டுமான பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பில் தொடங்கி உள்ளது. இன்னும் ஓரு சில மாதங்களில் இதற்கான பணிகள் முடியும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், தென்மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய எலும்பு புற்றுநோய் மற்றும் இதர எலும்பியல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, இறந்த நபர்கள் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் எலும்புகளைக் கொண்டு அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்க முடியும் என எலும்பியல் மருத்துவர் அறிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலையில் அரசு மருத்துவமனையில் இந்த எலும்பு வங்கி வரும்பட்சத்தில் இலவசமாக பொதுமக்கள் பயனடைவர் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.