தென் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மட்டும் 1,26,337 பேருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் பெருமிதப்பட்டுள்ளது. இன்று உலக இதய தினத்தை முன்னிட்டு, மருத்துவமனை சார்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மிக முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. நாள்தோறும் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வருகின்றனர். குறிப்பாக தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களிருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இதயவியல், எலும்பியல், நுரையீரல் சிகிச்சை, மகேப்பேறு மருத்துவம், குழந்தை நல சிகிச்சை மையம், பால்வினை நோய்கள், புற்றுநோய் என ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனி வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று உலக இதய தினத்தை முன்னிட்டு, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சார்பில் இதய சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “தென்தமிழகத்திலேயே மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை இதய பிரிவில் கடந்த ஒராண்டில் மட்டும் 1,26,337 வெளிநோயளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் 2,715பேர் உள்நோயளிகளாக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 24,287பேருக்கு இதய சுருள் படமும் (இதய ஆஞ்சியோபிளாஸ்டி), 34,330பேருக்கு இருதய சிகிச்சைக்கு ஸ்கேனும் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல 1,026 பேருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சையும், 418 பேருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் கொடுக்கப்பட்டுள்ளது. 65 பேருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் கருவியும், 139 பேருக்கு தற்காலிக பேஸ் மேக்கர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. 44 பேருக்கு சவாலான இதய வால்வு சுருக்கம் அகற்றுதல், கர்ப்பிணியாக இருந்த 15 பேருக்கு பிரசவ காலத்திலேயே இதய வால்வு சிகிச்சை கொடுக்கப்பட்டது போன்றவையாவும் மேற்கொள்ளப்பட்டது. அதுபோலவே 248 பேருக்கு 24 மணி நேர இசிஜி மற்றும் 109 பேருக்கு உணவுக்குழாய் வழியாக இருதய ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மகாசிரை தமனி சிகிச்சை மற்றும் இதய நீர்கோர்வை சரி செய்தல் மற்றும் மகாதமனி சிகிச்சை, பலூன் வைத்து இதய அடைப்பு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மூலம் நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ராஜாஜி மருத்துவமனையின் இதயத்துறை இணைப்பேராசிரியர் செல்வராணி இத்தகவல்களை தெரிவித்தார். இந்த சிகிச்சைகள் அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுபவை என்றும் அவர் தெரிவித்தார்.