உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பாலிசென்ட்ரிக் செயற்கை முழங்காலை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை முழங்கால் மூலம், முழங்காலை இழந்தவர்கள் இயல்பாய் நடக்க முடியுமென சொல்லப்பட்டுள்ளது.
முழங்கால் மேல்பகுதியை இழந்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது, இந்தியாவின் முதலாவது பாலிசென்ட்ரிக் செயற்கை முழங்கால். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை ஐஐடி ஆய்வாளர்களின் 'கதம்' என்ற குழு இந்த செயற்கை முழங்காலை உருவாக்கியுள்ளது.
சாதாரண செயற்கைக் கால்களை பயன்படுத்துவோரால், இயல்பாக பேருந்தில் ஏறவோ, வேகமாக பல கிலோ மீட்டர் நடக்கவோ முடியாது. ஆனால் பாலிசென்ட்ரிக் செயற்கை முழங்கால் மூலம் இயல்பான மனிதர்களை போலவே மாற்றுத்திறனாளிகளும் இருக்க முடியும் என்கின்றனர் ஐஐடி ஆய்வாளர்கள். இதனை தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். அந்த செயற்கை காலை மாற்றுத்திறனாளி ஹரி பெற்றுக்கொண்டு பயனடைந்தார்.
சொசைட்டி ஃபார் பயோமெடிக்கல் டெக்னாலஜி மற்றும் மொபிலிட்டி இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சி சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை முழங்கால்களை விட 4 அல்லது 5 மடங்கு மலிவு விலையில், சர்வதேச தரத்தில் இவை கிடைப்பதால் எளிதில் அனைவரும் பயன்பெற முடியும்.