அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்

அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
Published on

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு மூலம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.

மனிதனுக்கு அயோடின் பற்றாக்குறை காரணமாக முன் கழுத்து கழலை, தைராய்டு, மன வளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை இறப்பு வீதம் அதிகரித்தல் மற்றும் கருச்சிதைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்ப்பதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உப்பில் அயோடின் மற்றும் இரும்புச்சத்து இரண்டையும் சேர்த்து இரட்டை செறிவூட்டல் முறையில் உப்பை தயாரித்து விற்பனை செய்யவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இந்த உப்பு உற்பத்தி செய்வது, விநியோகம் செய்வது குறித்து உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் விநியோகஸ்தர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பி. கீதாஜீவன், தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் அயோடின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அவ்வாறு அயோடின் கலக்காத செறிவூட்டப்படாத உப்பு விற்கப்படுவதாக இருந்தால் அந்த உப்பு பாக்கெட்டில் இது மனித உபயோகத்திற்கு ஏற்றதல்ல என்று அச்சிட்டு விநியோகம் செய்ய அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது, நாட்டின் மொத்த உற்பத்தியில் 11 சதவீதம் தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இந்த உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. நிச்சயம் அயோடின் கலந்த உப்பு களை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும். உப்பு லேபிளில் உற்பத்தியாளர் முழுமையான முகவரி இருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளில், ’மனித உபயோகத்திற்கு இது ஏற்றதல்ல’ என்பதை அச்சிட்டு விற்பனை செய்யவேண்டும் என்றார்.  அயோடின் கலக்காத உப்பு தொடர்பாக நுகர்வோர்கள் புகார் அளிக்க தனியாக எண் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த தொலைபேசி எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறினார். மேலும் உப்பு உற்பத்தியாளர்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் சிறு சிறு வழக்குகளை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சித்த மருத்துவ பிரிவு, செவிலியர் குடியிருப்பு, சாத்தான்குளத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை இன்னும் பதினைந்து தினங்களில் திறக்கப்படும் என்றார். அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையம் 12 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது எனவும், தூத்துக்குடியில் விபத்து தகவல் மையம் 50 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

காயாமொழி, முதலூர், நாகலாபுரம், புதுக்கோட்டை ஆகியப் பகுதிகளில் 5 கோடி ரூபாய் செலவில் பொது சுகாதார மையம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பின்பு சித்த மருத்துவப் அலுவலகம் அமைக்கப்படும் என்று கூறினார்.

மேலும் சித்த மருத்துவ சிறப்பு பிரிவுகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறிய அவர், தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில் புதிதாக உருவாகியுள்ள தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான நடவடிக்கை மத்திய அரசு மூலம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். கூட்டத்தில் உணவு பாதுகாப்புப் துறை ஆணையர் முனைவர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com