மஞ்சளில் ஏராளமான ஆரோக்கிய குணங்கள் அடங்கியிருப்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்புத்தன்மை, வயதான தோற்றத்தை குறைக்கும் தன்மை, அழற்சியை குறைத்தல் போன்ற பல்வேறு நலன்கள் இருப்பதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. சிறிது மஞ்சளை ஒரு தம்ளர் நீரில் சேர்த்து அருந்தினாலே உடலிலுள்ள புண்கள் மற்றும் அழற்சியை சரிசெய்துவிடும்.
அதேபோலத்தான் கஸ்தூரி மஞ்சள் அல்லது காட்டு மஞ்சளிலும் பல்வேறு சரும நலன்கள் அடங்கியிருக்கிறது. காயங்கள் மற்றும் புண்களை ஆற்றுவதோடு சரும பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது.
கஸ்தூரி மஞ்சளில் உள்ள நன்மைகள்
1. கஸ்தூரி மஞ்சளில் பாக்டீரிய எதிர்ப்புத் தன்மை இருப்பதால் முகப்பருவை சரிசெய்கிறது. மேலும் சருமத்திலுள்ள அதீத எண்ணெய்ப்பசையை குறைப்பதால் முகப்பருவை உருவாக்கும் கிருமிகள் சரும துவாரங்களில் சேருவதை தடுக்கிறது. இதனால் முகப்பரு வருவது குறைந்து பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.
2. சருமத்திலுள்ள கருமையை நீக்குவதில் கஸ்தூரி மஞ்சள் முக்கியப்பங்கு வகிக்கிறது. ரோஸ்வாட்டருடன் சிறிது மஞ்சளை கலந்து மெல்லிய படலமாக சருமத்தின்மீது தொடர்ந்து பூசிவர கருமை நீங்கி நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் கண்களை சுற்றியுள்ள கருமையை நீக்குகிறது.
3. முகத்திலுள்ள சிறிய முடிகளை இயற்கையான முறையில் நீக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. கொண்டைக்கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவி உலரவிட்டு அதை மெதுவாக தேய்க்கவும். பின்னர் தண்ணீரால் கழுவ முடிகள் உதிர்ந்துவிடும். கஸ்தூரி மஞ்சள் சருமத்திற்கு மட்டுமல்ல, சிறுநீரக பிரச்னைகள் மற்றும் பிற உடற்பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.