தமிழகத்தில் நிலையான நோய் எதிர்ப்புசக்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 87 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக 4ஆவது கட்ட குருதி சார் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், நிலையான நோய் எதிர்ப்பாற்றல் குறித்தான குருதி சார் ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், தமிழகத்தில் நிலையான நோய் எதிர்ப்பாற்றல் பெற்றவர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதத்தில் இருந்து 87 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நான்காவது கட்ட குருதி சார் ஆய்வில் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 76 நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் உட்பட மாவட்டம் வாரியாக 32 ஆயிரத்து 245 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 93 சதவிகிதமும், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 91 சதவிகிதமும் நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.