பள்ளிக்காலங்களில் நாம் எல்லாருமே சிலமுறையாவது டைரி எழுதலாம் என்று நினைத்திருப்போம். ஒரு நாள் எப்படி கழிந்தது? நம்முடைய உணர்வுகளும் உணர்ச்சிகளும் எப்படி இருந்தது? என்பதுபோன்ற பல விஷயங்களை குறிப்பெடுத்து அவை அனைத்தையும் நினைவுகளாக சேகரிக்க யோசித்து இருப்போம். இருப்பினும் அவை அனைத்தும் பள்ளி வளாகத்திற்குள்ளேயே சுருங்கியிருக்காது.
ஒருவர் மன அழுத்தம் அல்லது மனச் சோர்வு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து வெளிவர ’’எழுத்துகள்’’ உதவும். குறிப்பாக மனநல பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு டைரி எழுதுவது ரிலாக்ஸாக அமையும்.
1. நாம் என்ன நினைக்கிறோம், ஒரு நிகழ்வு நம் மனதை எவ்வாறு பாதித்தது என்பனவற்றை ஒரு டைரியில் எழுதும்போது நம்முடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து நம்மாலேயே புரிந்துகொள்ள முடியும். அடுத்தமுறை அதேமாதிரியான பிரச்னை வரும்போது உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து நமக்கே ஒரு ஐடியா கிடைத்துவிடும்.
2. யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத உணர்ச்சிகளை எழுத்துகளில் கொண்டுவருவது சற்று ஆறுதலைக் கொடுக்கும். மேலும் இது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும்.
3. இலக்குகளை குறிப்பெடுங்கள். தினசரி டைடி எழுதும்போது அன்றாடம் நடந்தது மட்டுமின்றி உங்கள் இலக்குகள் மற்றும் சாதனைகள் என்ன என்பதையும் குறிப்பெடுங்கள். ஒருவேளை மனச்சோர்வு அல்லது மன பதட்டம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால்கூட உங்கள் குறிக்கோள் என்ன? அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்த ஓர் உணர்வைக் கொடுக்கும்.
4. நீண்ட காலம் மனச்சோர்வு அல்லது மன பதட்டத்தினால் அவதிப்படுபவர்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. டைரி எழுதும்போது எதிர்மறை எண்ணங்கள் வெளியேறி அழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.
5. உங்களை பற்றி நீங்கள் நன்றாக அறிந்துகொள்ளலாம். தினசரி உங்கள் வாழ்க்கையில் நடந்ததை எழுதும்போது அது நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்? ஒரு நிகழ்வின்மீது உங்கள் உணர்வுகளும், உணர்ச்சிகளும் எவ்வாறு இருக்கிறது? என்பன போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். இதனால் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள அதிகம் எழுத தூண்டப்படுவீர்கள்.