மீன் எண்ணெய் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த மீன் எண்ணெயானது பாசி எண்ணெய், க்ரில் எண்ணெய் மற்றும் ஒமேகா 3 மாத்திரைகள் என பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இந்த எண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும் என பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மையில் முறையான உடற்பயிற்சி மற்றும் டயட்டுடன் இந்த எண்ணெயை சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும் என்கிறது ஆய்வுகள்.
மீன் எண்ணெயின் பயன்பாடுகள்
இதய நலனை மேம்படுத்தும்
இதய நலன் ஆரோக்கியமான வாழ்விற்கான சாவி எனலாம். முழு உடல்நலனையே இதயம் ஒழுங்குபடுத்துகிறது. மீன் எண்ணெய் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்து, ரத்த அழுத்தத்தை சமன்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கட்டிகள் உருவாவதையும் தடுக்கிறது. மீன் எண்ணெயை தொடர்ந்து சேர்த்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் மேம்படுவதை கண்கூடாக காணலாம்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலம் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உடலை தயார்படுத்துகிறது. மீன் எண்ணெயை எடுத்துக்கொள்ளும்போது அது இதயம், மூளை, கண் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோயெதிர்ப்பு மண்டலத்தையே வலுப்படுத்துகிறது.
எலும்புகளின் ஆரோக்கியம்
உடலின் அமைப்பு, சமநிலையை ஒருங்கிணைக்கிறது எலும்புகள். மீன் எண்ணெயில் ஒமேகா 3 அமிலங்கள் இருபப்தால் இது எலும்புகளை உறுதிப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அறிவாற்றல் மேம்படும்
ஷார்ப்பான மூளை வேண்டும் என ஆசைப்படுபவர்கள் மீன் எண்ணெயை உணவில் சேர்க்கலாம். காரணம், ஒமேகா 3 அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும். மூளையின் ஆரோக்கியத்தையும் கணிசமாக அதிகரிக்கும்.
சரும ஆரோக்கியம்
ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க சருமத்தின்மீது கவனம் செலுத்துவது அவசியம். சரும பராமரிப்பு அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் மாறியிருக்கிறது. மீன் எண்ணெய் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் போன்ற நோய்கள் வராமலும் தடுக்கிறது. மேலும் வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது.