குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் டைப் 1 நீரிழிவு நோய் -முதல்வரிடம் உதவி கோரும் பிஞ்சுகள்!

குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் டைப் 1 நீரிழிவு நோய் -முதல்வரிடம் உதவி கோரும் பிஞ்சுகள்!
குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் டைப் 1 நீரிழிவு நோய் -முதல்வரிடம் உதவி கோரும் பிஞ்சுகள்!
Published on

குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் டைப் 1 நீரிழிவு நோய் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதற்கான மருத்துவ வசதி பலருக்கும் எட்டாக்கனியாகவே உள்ளது.

பெரியவர்கள் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்படுவதை நாம் கண்டிருப்போம். ஆனால் தான் விருப்பப்பட்டதை நினைத்த நேரத்தில் உண்ண முடியாத அளவிற்கு குழந்தைகளும் அவதிப்படுவது உண்டு. குழந்தைகளை அதிக அளவில் தாக்கும் நோய்களில் type1 diabetes-ம் ஒன்று. நாளொன்றிற்கு 4 ஊசிகள், உரிய நேரத்தில் இன்சுலின், மிகவும் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் ஆகியவற்றை பெரியவர்களைப்போல 2, 3 வயதிலே டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பின்பற்றி வருகின்றனர்.

நமது உடலுக்கு வலிமையை தரும் குளுக்கோஸ் என்னும் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிப்பதையே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம். Type2 சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டோரையே பாதிக்கும். ஆனால், டைப்-1 சர்க்கரை நோய் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்தான் பாதிக்கும்.

பிறந்த குழந்தைக்குக்கூட இந்த டைப்-1 சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெரியவர்களுக்கும் டைப்-1 ஏற்படலாம். இவர்கள், நிச்சயமாக வாழும் காலம் வரை இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து முறை வரை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது சிறந்தது.

நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதை பெரியவர்கள் அறிந்து கொண்டு இயல்பாக எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து விடுவர். ஆனால் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் type 1 சர்க்கரை நோய் என்பது அவர்களை உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும், குழந்தைகளின் பெற்றோரின் மன நிலையும் முற்றிலுமாக புரட்டிப் போட்டு விடுகின்றன. பள்ளிகளில் சக குழந்தைகளைப்போல் இல்லாமல் சில சமயங்களில் தனித்து விடப்படுபவது, பள்ளியில் சேர்க்கையின்போதே type 1 சர்க்கரை நோய் இருந்தால் சேர்க்க மாட்டோம் என நிராகரிக்கப்படுவது, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தனிமைப்படுத்தி விடுவது என இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இன்னல் என்பது நீண்டு கொண்டே செல்கிறது.

மனவலிமை குறைவாகவே இருக்கும் மழலை பிஞ்சுகளும், அவர்களின் பெற்றோரும் படும் வேதனை வார்த்தைகளால் விவரித்து விட முடியாத ஒன்றாக இருக்கிறது. கடுமையான மன வேதனைக்கு உள்ளாகும் குழந்தைகள் சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையில் விம்பி விடுவதாகவும், அவர்களது பெற்றோர்களும் மனச்சுமைக்கு ஆளாவதாவும் தொடர்கதையாகி வருகிறது. ஆனால் பிறந்தது முதலே இந்த டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு எதிர்நீச்சல் போட்டு தொடர்ந்து இன்சுலின் உதவி மூலம் வெற்றி நடை போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் type1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து சமூகத்தில் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரும் முனைப்பிலும், இந்த நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும் இந்திய மற்றும் தமிழக அளவில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. India Type 1 diabetes foundation மற்றும் tamilnadu Type 1 diabetes foundation ஆகிய அமைப்புகள், whatsapp மூலம் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை அழைத்து இந்த நோய் குறித்து விழிப்புணர்வு மன ரீதியான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

மேலும் இந்த நோய்க்கான மருத்துவ வசதியை எளிதில் பெற முடியாத பலருக்கும் இன்சுலின் மற்றும் சென்சார் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்து உதவி வருகின்றனர். இந்தக் குழு முழுக்க முழுக்க டைப் 1 டயபடிஸ் ஆல் பாதிக்கப்பட்டு வாழ்வை நகர்த்தி வரும் நபர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலரையும் ஒருங்கிணைத்து அவ்வப்போது இந்த நோய் இயல்பான ஒன்று தான் எனவும், சமூகத்தை அனைவர் போல எந்த ஒரு தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வாழவேண்டும் என்ற அறிவுரையையும் விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் கொடுத்து வருகின்றனர்.

Type 1 diabetes ஆல் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் பல்வேறு விதமான மனச்சுமை களுக்கு ஆளாகி வருவதாகவும், இதற்கான நிரந்தரத் தீர்வு கண்டு பிடிக்கப்படும் வரையில் தங்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்.

வெளி நாடுகள் பலவற்றிலும் இந்த டைப் 1 சர்க்கரை நோய்க்கான பல்வேறு மருத்துவ உதவிகளையும் அந்தந்த நாட்டு அரசுகளே செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் இன்சுலின், உடலில் சர்க்கரையின் அளவை தொடர்ந்து கண்காணிக்கும் சென்சார் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கி உதவ வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது.

- பிரவீண்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com