சுட்டெரிக்கும் வெயில்.. கோடை காலத்தில் தாக்கும் நோய்கள் - குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

சுட்டெரிக்கும் வெயில்.. கோடை காலத்தில் தாக்கும் நோய்கள் - குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
சுட்டெரிக்கும் வெயில்.. கோடை காலத்தில் தாக்கும் நோய்கள் - குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
Published on

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பச்சிளம் குழந்தைகள் முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட கூடிய நோய்கள் என்னென்ன? அவை ஏற்படாமல் எப்படி தடுக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

கோடைகாலத்தில் வெயில் அதிகரிப்பால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது இயல்பு. இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கு அல்ல. அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகள் மெல்லிய சருமம் கொண்டவர்கள் என்பதால் வெயில் காலத்தில் மிலிரியா எனப்படும் வியர்க்குரு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதனை சின்னம்மை என்று தவறாக கருதி குழந்தைகளை தனிமைப்படுத்தக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

வெயில் காலத்தில் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது குடிப்பதற்காக தரமற்ற தண்ணீர் அல்லது குளிர்பானங்களை தரக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு தருவதன்மூலம், காய்ச்சல், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுத்தமான குடிநீரை காய்ச்சி, வடிகட்டி, ஆறவைத்து கொடுக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 6 முறையாவது சிறுநீர் கழிக்கும் அளவிற்கு தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது குழந்தைகள் நல நிபுணர்களின் அறிவுரை. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் குழந்தைகளை அழைத்து செல்வதை முற்றிலும் தவிர்த்தல் சிறந்தது. காரமான உணவுகளை தவிர்த்தல், குளிர்சாதன பெட்டியில் வைத்த தண்ணீரை கொடுப்பதை நிறுத்துதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

தர்பூசணி, வெள்ளரி, திராட்சை, மாதுளை என பழ வகைகளையும், பழச்சாறுகளையும், இளநீர், நுங்கு போன்ற உடலுக்கு கேடு தராதவற்றை கொடுப்பதன் மூலம் கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com