உறுதியான மற்றும் ஆரோக்கியமான நீண்ட கூந்தல்மீது யாருக்குத்தான் ஆசை இருக்காது? எங்கு சென்றாலும் மாசு நமது சருமம் மற்றும் கேசத்தை விட்டுவைப்பதில்லை. பெரும்பாலானோருக்கு சருமப் பிரச்னைகளுடன் முடி உதிர்வு, வறட்சி மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்னைகள் தீராத ஒன்றாக உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளுடன் முடி பராமரிப்பும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். அதிலும் குறிப்பாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எண்ணெய் முடி வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மையை அதிகரிக்கும். செம்பருத்தி முடிக்கு எண்ணற்ற நன்மைகளை பயக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை முறையாக எப்படி பயன்படுத்துவது என்று பலருக்கும் தெரிவதில்லை. முடி உதிர்வைத் தடுக்க தேவையான அளவு புரதச்சத்துமிக்க உணவுகளுடன் வீட்டில் காய்ச்சிய செம்பருத்தி எண்ணெயை பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள்.
செம்பருத்தி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
செம்பருத்தி பூ 10, செம்பருத்தி இலை 10 எடுத்து அரைத்து பேஸ்ட்டாக்கவும். அதை ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். வாரத்திற்கு ஒருமுறை இந்த எண்ணெயைக்கொண்டு 10 நிமிடங்கள் தலை மற்றும் முடியை மசாஜ் செய்து 30 நிமிடங்கள் வைக்கவும். பிறகு ரசாயனம் குறைவான ஷாம்புவால் தலையைக் குளிக்க, முடி உதிர்வது குறையும். மேலும் முடி கருமையாவதுடன், உறுதித்தன்மையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.