எடை குறைப்பு என்பது ஒரே ஒரு செயலால் மட்டும் நிகழ்வது அல்ல; இதில் பல்வேறு செயல்கள் அடங்கியிருக்கிறது. அதாவது உணவு பழக்கம், டயட் முறை, உடற்பயிற்சி, போதை மற்றும் புகைப்பழக்கம் போன்ற பலவும் அடங்கியிருக்கிறது. இங்கு நம்மில் பலருக்கும் ஸ்லிம்மாகவே இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உடல் எடையில் மெட்டபாலிசம் முக்கிய இடம் வகிக்கிறது. மெட்டபாலிசம் அல்லது வளர்சிதை மாற்றம் என்பது தினசரி எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதை பொருத்தது. அதற்கு உடற்பயிற்சி, தூக்க சுழற்சி மற்றும் நேரத்திற்கு ஆரோக்கியமான உணவு போன்றவை சரியாக இருப்பது அவசியம்.
எடை அதிகமாக இருப்பவர்கள் சாப்பிடும் கலோரிகளை விட ஏற்கெனவே உடலில் தேங்கியிருக்கும் கலோரிகளையும் எரிக்கவேண்டும். அப்போதுதான் எடை குறைப்பு என்பது சாத்தியமாகும். வாழ்நாள் முழுதும் ஸ்லிம்மாக இருக்கவேண்டும் என்பது ராக்கெட் சயின்ஸோ அல்லது மதுவை கைவிடுதலோ அல்ல என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா. எடைகுறைப்பது மட்டுமன்றி அதே ஒல்லியான மற்றும் ஃபிட்டான தேகத்தை வாழ்நாள் முழுதும் பராமரிக்க சில அடிப்படை டிப்ஸ்களை பின்பற்றினால் போதும் என்கிறார் அவர்.
1. உணவின் அளவு
காலையிலிருந்து இரவு தூங்கப்போகும்வரை எவ்வளவு உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். பொதுவாக ஒரு நபர் காலை உணவு அதிகமாகவும், மதிய உணவு குறைவாகவும், இரவு உணவு அதைவிடவும் குறைவாகவும் சாப்பிடவேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஒருநாளுக்கான நேரம் குறைய குறைய எடுத்துக்கொள்ளும் உணவும் அளவும் குறைவது கலோரிகள் உடலில் சேராமல் தடுக்கும்.
2. உணவுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பு நீராகாரம்
நீராகாரங்களை உணவுக்கு பிறகு எடுத்துக்கொள்ள கூடாது. எப்போதும் உணவு சாப்பிடுவதற்கு குறைந்தது 45 நிமிடங்களுக்கு முன்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது செரிமான நொதிகள் உடனடியாக நீர்த்துப்போவதைத் தடுத்து செரிமானத்தை தாமதப்படுத்தும். உணவுடன் நீராகாரங்கள் எடுத்துக்கொள்வது பொதுவாக உணவின் ஊட்டச்சத்து உடலில் சேர்வதை தடுக்கும்.
3. உகந்த நேரம்
என்னென்ன உணவுகளை எந்தெந்த நேரங்களில் எடுத்துக்கொள்கிறோம் என்பது எடைக்குறைப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. காலையில் முதலில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களில் தொடங்கி பின்னர் வேகவைத்த உணவுகள், அதைத்தொடர்ந்து புரதங்கள் மற்றும் கொழுப்புகள், தொடர்ந்து கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பருப்பு, புரதங்கள் அல்லது காய்கறிகள் போன்ற உணவுகளுக்கு செல்லலாம். இப்படிச் செய்வது ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். இதனால் நீரிழிவு போன்ற பிரச்னைகள் வராது. அதேசமயம் கொழுப்புகள் சேர்வதும் தடுக்கப்படும்.