ஒரு விஷயத்தை அப்பறம் பாத்துக்கலாம், செய்யலாம் என தள்ளிப்போடுவது முதலில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது நீண்டகாலத்துக்கு தொடர்ந்தால் அந்த மனோபாவம் உங்களது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கும் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
Procrastination எனக் கூறக்கூடிய தள்ளிப்போடும் செயல்கள் சோம்பேறித்தனமோ அல்லது மோசமான நேர நிர்வாகமின்மையின் விளைவு அல்ல. மாறாக அது மன நிர்வாகமின்மையை குறிக்கிறது என ஆய்வுகளின் கூற்று மூலம் அறிய முடிகிறது.
செயலை தள்ளிப்போடுபவர்கள், ஒரு வேலையைத் தொடங்குவதற்கு முன்பே தள்ளிப்போடுவதையோ அல்லது பாதியிலேயே விட்டுவிடுவதையோ வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
இந்த நிலை ஒருகட்டத்தில் வெறுப்பையே ஏற்படுத்துமாம். மூளையின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதிகள் தள்ளிப்போடும் செயல்களில் ஈடுபடும் நபர்களில் வேறுபட்டவையாக இருக்கிறது என்று ஆராய்ச்சி முடிகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உளவியலாளர்களின் கூற்றுப்படி, தன்னம்பிக்கை அற்றவர்கள் பெரும்பாலும் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதனை தவிர்க்கக் கூடிய செயல்களையே செய்வார்கள். ஆன்சைட்டி, டிப்ரஷன், பேனிக் அட்டாக் போன்ற மனநலம் சார்ந்த பாதிப்புக்கு ஆளாகியிருப்போருக்கு தள்ளிப்போடும் மனநிலை ஏதோ பயனுள்ளதாக இருந்தாலும் அது தற்காலிகமானதாகதான் இருக்கும். ஆனால் நாளடைவில் இந்த மனோபாவம் சுயவிமர்சனத்துக்கும், குற்ற உணர்ச்சிக்குமே வழிவகுக்கும் சைக்கோலாஜிஸ்ட் கூறுகிறார்கள்.
அதேபோல தள்ளிப்போடும் மனநிலையை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி உட்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றாதவர்களாகவும், மன அழுத்தத்தை அதிகப்படுத்திக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள் என ஒத்திவைப்பவர்களைத் தொடர்ந்து கையாளும் உளவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே, ஒரு செயலை தள்ளிப்போடுவதை எப்படி நிறுத்துவது என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவ்வாறு யோசிப்போர் தங்களது மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை எப்படி நிர்வகிக்கலாம் என்பதில் அதிகம் கவலைப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதன்படி எடுக்கக்கூடிய சில எளிய படிநிலைகளை பார்க்கலாம்:
1) கவனச்சிதறல்களை விலக்கி வைத்துவிட்டு பணியில் கவனம் செலுத்தலாம்.
2) நீங்கள் செய்ய இருக்கும் வேலைகளை வெவ்வேறு குழுக்களாக பிரித்து வைத்து அதனை புள்ளிவாரியாக முடிக்க எண்ணுங்கள்
3) ஒரு செயலை செய்து முடித்ததும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.
4) ஒரு கால அட்டவணையை போட்டு வைத்து அதை சரியாக பின்பற்றுங்கள்.
5) நீங்கள் போட்டு வைத்த திட்டம் தொடக்கத்தில் வொர்க்கவுட் ஆகவில்லை என்றால், அதை மறு கட்டமைப்பு செய்து, மறுசீரமைக்க முற்படுங்கள்.
6) ஆரோக்கியமான, சத்தான உணவை உண்ணுங்கள். உடற்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.