வீட்டிலேயே எளிதில் வளர்க்கக்கூடிய ஹெல்தி காய்கறிகள் - ட்ரை பண்ணுங்க!
காய்கறிகள் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதுதான். ஆனால் ஆரோக்கியமான காய்கறிகளை சாப்பிடுகிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை. வீட்டிலேயே எளிதில் வளர்க்கக்கூடிய சில காய்கறிகளையும் அதன் பயன்களையும் பார்க்கலாம்.
வீட்டிலேயே காய்கறிச் செடிகளை வளர்க்கும் பழக்கத்தை வழக்கப்படுத்துவதால் சுற்றுச்சூழலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இதன்மூலம் சுகாதாரமான மற்றும் தூய்மையான உணவுப்பொருட்களை பெற முடியும். தோட்டம் அமைத்தல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது குறித்து பல ஆய்வுகள் விளக்குகின்றன. மேலும் கடைகளில் காய்கறிகள் வாங்கும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
வீட்டில் எளிதில் வளர்க்கக்கூடிய செடிகள்:
தக்காளி: எத்தனைக் கடைகளில் தேடினாலும் சிலருக்கு பிடித்தமாதிரியான ஃப்ரெஷ்ஷான தக்காளி கிடைக்கிறதில்லை. அவர்கள் வீட்டிலேயே சிறிய தொட்டியில் வைத்தேகூட தக்காளிச்செடியை எளிதாக வளர்க்கலாம்.
கத்தரி: பெரும்பாலானவர்கள் விரும்புகிற அடிக்கடி பயன்படுத்தக்கூடிய காய்களில் ஒன்று கத்தரிக்காய். இதைவைத்து நிறைய டிஷ்களை செய்யமுடியும்; அதேசமயம் மலிவானதும்கூட. இந்தச் செடியும் எளிதில் வீட்டிலேயே வளர்க்கக்கூடியதுதான்.
மிளகாய்: தினசரி அனைத்து உணவுகளுக்கும் தேவைப்படக்கூடிய முக்கிய பொருட்களில் ஒன்று மிளகாய். பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் என எதுவாக இருந்தாலும் வீட்டிலேயே வளர்ப்பது எளிது. சீக்கிரம் வளரக்கூடியதும் கூட!
கொத்தமல்லித்தழை: தினமும் காய்கறி வாங்க கடைக்குச் செல்லும்போது இலவசமாக மல்லித்தழை தரும்படி கடைக்காரரிடம் கேட்பதை சிலர் வாடிக்கையாக வைத்திருப்பர். இனிமேல் அப்படி கேட்பதை விட்டுவிட்டு சிறிய தொட்டியில் பதியம்போட்டு வீட்டிலேயெ வளர்த்து ஃப்ரஷ்ஷாக பயன்படுத்தலாம்.
புதினா: இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்களில் ஒன்று புதினா சட்னி. மேலும் பல உணவுகளில் வாசனை மற்றும் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்திய புதினா தண்டுகளை நட்டுவைத்தாலே போதும். சில நாட்களில் புத்துணர்ச்சிமிக்க புத்தம்புது புதினா நமக்கு வீட்டிலேயே கிடைத்துவிடும்.