"என் கண் முன்னாடியே குழந்த உசுரு போச்சு; சுகாதார சீர்கேடே டெங்குக்கு காரணம்" - சிறுவனின் தாய் வேதனை!

டெங்கு காய்ச்சல் பாதித்து 4 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குழந்தையின் உடல் தகனம் செய்ய மாட்டோம் என உறவினர்கள் பிடிவாதம்.
உயிரிழந்த சிறுவனின் தாய்
உயிரிழந்த சிறுவனின் தாய் புதிய தலைமுறை
Published on

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, வளசரவாக்கம் மண்டலம் 7 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார், சோனியா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இவர்களது மூத்த மகன் ரக்சன்(4) கடந்த 6 ஆம் தேதி அன்று காய்ச்சல் காரணமாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல்- சிறுவன் உயிரிழப்பு
டெங்கு காய்ச்சல்- சிறுவன் உயிரிழப்புபுதிய தலைமுறை

இதனையடுத்து சிறுவனின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது . அப்போது அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சல் வர காரணம் எனக் குற்றம் சாடி உள்ளனர். தனது கண்முன்னே குழந்தையின் உயிர் பிரிந்ததாக உருக்கமாக அவரது தாய் தெரிவித்தார்.

”எனது குழந்தைக்கு ஏற்பட்ட டெங்கு பாதிப்பு இந்த பகுதியில் யாருக்கும் பாதிக்காதவாறு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும்” என சிறுவனின் தாய் சோனியா கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிள்ளையார் கோவில் தெரு மக்கள் கூறுகையில்,

”நாங்கள் குடியிருக்கும் பிள்ளையார் கோயில் தெருவில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகிறது. பாதாள சாக்கடைகளில் குப்பைகள் அனைத்தும் கழிவுநீர் செல்ல முடியாத நிலையில் அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்தப் பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படாததால் 4 நாட்களுக்கு ஒரு முறை மெட்ரோ சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதனை டப்புகளில் பிடித்து வைத்துகொள்கிறோம். தெருக்களில் உள்ள தண்ணீர் டேங்குகள் சுத்தம் செய்யப்படாமல் தண்ணீரை நிரப்புவதால் அதில் உள்ள கிருமிகள் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த பகுதியில் அடிப்படை தேவைகளான பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்தல் குடிநீருக்கென்று தனியாக குழாய் அமைத்தல், தினமும் குடிநீர் விநியோகம் ஏற்படுத்துதல் என அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்” என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

மேலும், இந்த குழந்தையின் இறப்புக்கு பகுதி கவுன்சிலரும் சுகாதாரத் துறை அதிகாரிகளுமே காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தை தின் உடலை தகனம் செய்ய மாட்டோம் என்றும் உறவினர்கள் பிடிவாதமாக கூறியுள்ளனர்.

குழந்தை இறந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் மண்டல அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

”மாநகராட்சி தரப்பில் வாரம் ஒருமுறை சுகாதாரம் சம்பந்தமான ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் மேற்கொள்ளப்படுகிறது. கொட்டப்படும் கழிவுகளும், குப்பைகளும் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. அப்பகுதிவாசிகள் குடிநீரை கேன்களில் சேமித்து வைத்துள்ளால், அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவுகிறது. இந்த சம்பவம் மெட்ரோ அதிகாரிகள் தொடர்புடையது” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுகாதாரத் துறை சார்பிலும், மாநகராட்சி அதிகாரிகள் சார்பிலும் உரிய நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

மெட்ரோ வளசரவாக்கம் பகுதி பொறியாளர் ஆனந்த் குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

அப்பகுதி மக்களுக்கு உரிய வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே வழங்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்குகளை சுழற்சி முறையில் சுத்தம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் மூலம் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து கூறுகையில்..

"சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்‌ஷன் கடந்த சில நாட்களாக #டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறுகையில்..,

”டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பொதுமக்களும், அரசு அமைப்புகளும் இணைந்து நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.

டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com