இப்போது கொரோனா தவிர பெயர்தெரியாத பல நோய்களும் பரவிக்கொண்டிருக்கிறதைக் கேள்விப்படுகிறோம். மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவை முறையாக பின்பற்றப்பட்டாலும் நோய்க்கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம்.
ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகமுள்ள உணவுகள்
பெர்ரீஸ், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கேரட் மற்றும் பூசணிக்காய் போன்ற நான் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்திருக்கின்றன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவற்றில் வைட்டமின் சி, பி, மற்றும் இ ஆகியவையும் நிறைந்துள்ளன.
மஞ்சள் பால்
மஞ்சளில் அழற்சியை எதிர்க்கும் கர்குமின் என்ற மூலக்கூறுகள் உள்ளன. மஞ்சள் மற்றும் கறுப்பு மிளகை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்காலமாக இவை உணவில் சேர்க்கப்படுகின்றன. இதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ சேர்த்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து டீ வடிவில் (ஹல்தி தூத்) உட்கொள்ளலாம்.
ஸ்டார் அனிஸ்
பிரியாணிகளில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும் இந்த நட்சத்திர வடிவ அனீஸில் ஷிகிமிக் அமிலம் நிறைந்துள்ளது. கடந்த 15 வருடங்களாக வைரஸ் தடுப்பு மருந்துகளில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதில் புரதச்சத்தும், குணமாக்கும் பண்புகளும் அதிகம் இருக்கிறது. இந்த ஸ்டார் அனீஸை சூப்புகள் மற்றும் குழம்புகளிலும் சேர்க்கலாம். இரண்டு அனீஸ் துண்டுகளை நீரில் போட்டு 15 நிமிடம் கொதிக்கவைத்து அந்த நீரைக் குடிக்கலாம்.
தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெயை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம். இது அழற்சியை குறைப்பதோடு, வைட்டமின் செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இதில் ஆன்டி வைரல் பண்புகள் அதிகம் இருப்பதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
கொய்யாப்பழம், ஆரஞ்சு, நெல்லிக்காய், பெர்ரீஸ், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள் என கலர்ஃபுல் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதிமதுரம்
சித்த மருத்துவம் மற்றும் நாட்டு வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிற அதிமதுரத்தில் ஆன்டிமைக்ரோபயல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கிறது. இதை அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டும்.