தினசரி நாம் குறைந்தது 6 மணிநேரமாவது அமர்ந்தே இருக்கிறோம். இப்படி அமர்ந்தே இருப்பது குறுகிய மற்றும் நீண்டகால உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி அகர்வால். அதிக நேரம் உட்கார்ந்திருப்பது உடலின் மெட்டபாலிசத்தை குறைத்து ரத்தத்தின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு கரைதல் போன்ற உடலின் செயல்பாடுகளை பாதிக்கும் என்கிறார் அவர். குறிப்பாக புகைப்பிடித்தலை போன்றே அதிக நேரம் உட்கார்ந்திருத்தலும் ஆயுளை குறைக்கும் என்கிறார். மேலும் அமர்ந்தே வேலை செய்பவராக இருந்தாலும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது எழுந்து சிறிது நடக்கும்படியும் வலியுறுத்துகிறார் நிமாமி.
இதய பாதிப்பு: அதிக நேரம் அமர்ந்திருப்பது கார்டியோவாஸ்குலார் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மேலும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சுவாசமண்டல பாதிப்பு: நீண்ட நேரம் அமர்ந்திருப்பது நுரையீரலின் இயக்கத்தை குறைத்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.
உடல் பருமன்: குறைந்த கலோரிகளை எரிக்கும்போது பருமன் அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததுதான். இதனால்தான் உடல் உழைப்பின்மையும் உடல் பருமனும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது என்கிறோம். அமர்ந்துகொண்டே இருப்பது உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கிறது என்கிறார் நிமாமி.
எலும்பு ஆரோக்யம்: அதிக நேரம் அமர்ந்திருப்பது எலும்புகளையும் மூட்டுகளையும் பலவீனப்படுத்துகிறது. இது எளிதாக எலும்பு முறிதலுக்கு வழிவகுக்கிறது. மேலும் இடுப்பு, கழுத்து மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது.
மனநலம்: அமர்ந்துகொண்டே இருப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை புரிந்துகொள்வதைப்போல் மனநல பாதிப்புகளை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாதுதான். ஆனால் அதிக நேரம் அமர்ந்திருப்பது பல்வேறு மனநல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கிறார் நிமாமி. நடத்தல், உடற்பயிற்சி போன்ற மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது இதற்கு முக்கிய காரணம் என்கிறார் நிமாமி.
எனவே ஒரே இடத்தில் அமர்ந்தே இருக்காமல் உடல் உழைப்பை அதிகரிப்பது உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்கும் என்கிறார் நிமாமி அகர்வால்.