கர்ப்பிணிகளின் தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லிகள் கலந்திருந்ததே மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 111 குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என குற்றஞ்சாட்டியிருக்கிறது லக்னோவின் குயின் மேரி மருத்துவமனையின் ஆய்வு.
பிறந்த குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் 130 கர்ப்பிணிகளை குயின் மேரி மருத்துவமனை ஆய்வுக்கு உட்படுத்தியது. பேராசிரியர்கள் சுஜாதா தேவ், டாக்டர் அப்பாஸ் அலி மேஹ்ந்தி மற்றும் டாக்டர் நைனா விவேதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கர்ப்பிணிகளின் தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லிகள் கலந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவே பிறந்த குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என குயின் மேரி மருத்துவமனை குற்றஞ்சாட்டியிருக்கிறது.
குறிப்பாக சைவம் சாப்பிடும் பெண்களைவிட அசைவம் சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலில்தான் பூச்சிக்கொல்லிகள் அதிகள் இருப்பதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் சைவம் சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலிலும் பூச்சிக்கொல்லிகள் இருந்ததாக கூறியுள்ளது ஆய்வு. ரசாயன விவசாயமே இதற்கு முக்கிய காரணம் என விளக்கியிருக்கிறது. வித்தியாச வித்தியாசமான ரசாயனங்கள் பச்சை காய்கறிகள் மற்றும் பயிற்களின்மீது தெளிக்கப்படுகிறது. மேலும், விலங்குகளுக்கும் ரசாயன ஊசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.
இவற்றை சாப்பிடுவதுதான் தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லிகள் சேர்வதற்கு காரணம். குறிப்பாக அசைவம் சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலில் அதிக பூச்சிக்கொல்லிகள் கண்டறியப்பட்டதற்கு இதுதான் முக்கிய காரணம் என விளக்கியிருக்கிறது ஆய்வு.
அதிலும் குறிப்பாக சைவம் சாப்பிடும் பெண்களைவிட அசைவம் சேர்த்துக்கொள்ளும் பெண்களின் தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லிகள் 3 மடங்கு அதிகம் இருப்பதாக கூறியுள்ளது. இதனால்தான் இறைச்சி மற்றும் பிற உணவுகளை சாப்பிடாத பிறந்த குழந்தைகளின் உடலில் பூச்சிக்கொல்லிகள் தாய்ப்பால் மூலமாக பரவியிருக்கிறது. இவையே குழந்தைகளுக்கு மோசமான தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறியிருக்கிறது எனவும் விளக்கியுள்ளது அந்த ஆய்வு.
இதனிடையே பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கான காரணத்தை கண்டறிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது மாவட்ட மாஜிஸ்திரேட். இந்த குழுவானது தலைமை வளர்ச்சி அதிகாரியின் தலைமையின்கீழ் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.