ஆரோக்யமான வாழ்க்கை என்பதில் உடல் மற்றும் மனநலம் இரண்டுமே அடங்கும். இந்த இரண்டுமே நலமுடன் இருக்க சில பழக்கவழக்கங்களை கடைபிடித்தல் சிறந்தது. சிலருக்கு ஏதாவது ஒரு விஷயம் நினைத்ததுபோல் நடக்காவிட்டாலோ அல்லது திடீரென எதிர்பாராத ஒரு அடி வாழ்க்கையில் விழும்போதோ எளிதாக கெட்ட பழக்கவழக்கங்களுக்கு தங்களை அடிமையாக்கிக் கொள்கிறார்கள். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பிரச்னையிலிருந்து தப்பிச்செல்ல வழிசெய்தாலும், அந்த பழக்கவழக்கமே பின்னாளில் பலருடைய வாழ்க்கையில் பிரச்னையாக மாறிவிடுகிறது.
நல்ல பழக்கவழக்கங்கள் மனதை நலமுடன் வைத்திருப்பதுடன் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஜங்க் ஃபுட்ஸ்களை தவிர்த்தல், உடற்பயிற்சி செய்தல், நல்ல உறக்கம் போன்றவை ஒரு நபரின் ஆரோக்யமான மனநிலைக்கு காரணமாக அமைகிறது. நம் அனைவருக்கும் தெரிந்த சில 5 பழக்கவழக்கங்கள் நமது உடல் மற்றும் மனநலத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
1. உடற்பயிற்சி
முடிந்தவரை அதிகநேரம் உடற்பயிற்சிக்கு ஒதுக்குவது சிறந்தது. உடலை ஃபிட்டாக வைக்க தினசரி உடற்பயிற்சி என்பது அவசியம். நமது உடலானது அதிகநேரம் இயக்கத்தில் இருப்பது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை மறக்கவேண்டாம். காலை, மாலை நடைப்பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் உடற்பயிற்சிகளையும் மாறிமாறி செய்யவேண்டும்.
2. மன அழுத்தம்
மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தெரிந்து வைத்திருக்கவேண்டும். அதிகப்படியான மன அழுத்தம் மனநிலையை பெரிதளவில் பாதிக்கும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தான். மனநலம் மோசமாகும்போது அது உடல்நலத்தையும் சேர்த்து பாதிக்கும். பதற்றம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்த சில எளியப்பயிற்சிகளை பின்பற்றவேண்டும்.
3. காலை உணவு
காலை உணவை கட்டாயமாக தவிர்த்தல் கூடாது என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. ஒரு நாளில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க தேவையான சக்தியை வழங்குவது காலை உணவுதான். எனவே அதிக ஊட்டச்சத்துமிக்க காலை உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
4. தூக்கம்
தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். தினசரி நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இரவு நன்றாக தூங்காவிட்டால், அது பகலில் ஒருவித சோர்வை ஏற்படுத்தி சுறுசுறுப்பாக இயங்கமுடியாமல் செய்துவிடும். எனவே தினமும் இரவு எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்கிறோம் எப்போது எழுகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
5. டயட்
டயட் என்ற வார்த்தையே பணக்காரர்களுக்குத்தான் என்ற எண்ணம் தற்போது பலரிடையே காணப்படுகிறது. தினமும் ஆரோக்கியமான உணவுக்கு அதிக பணம் செலவிடவேண்டும் என்றும் பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் தினசரி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களை சரியான முறையில் எடுத்துக்கொள்வதே முறையான டயட் என்கின்றனர் நிபுணர்கள். தினசரி நாம் சாப்பிடுகிற அரிசி சாதம், பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை எந்த நேரத்தில் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து ஒரு நாளைக்குத் தேவையான கலோரி உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை மறக்கவேண்டாம்.