பொதுவாக ’தனிப்பட்ட சுகாதாரம்’ என்றால் அதில் வெளிப்புறம் சுகாதாரம் மட்டும்தான் அடக்கமா? சற்று யோசித்து பார்த்தால் வெளிப்புற சுத்தத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு உள்ளார்ந்த சுத்தத்திற்கும் (mental hygiene) முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது நமக்கு புரியும். மேலும், உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. மனது ஆரோக்கியத்திற்கு மனம் சுத்தமாக இருக்கவேண்டும்.
மன சுகாதாரத்திற்கு சில எளிய ஆலோசனைகள்:
தெரபியை முயற்சிக்கலாம் - நீண்ட நாட்களாக மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறவர்கள் நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறுவதில் தவறில்லை. இதனால் நன்கு பலன் கிடைக்கும்.
சுய பராமரிப்பை பழக்கப்படுத்தவும் - சுய பராமரிப்பு மனநலனை மேம்படுத்த மிகச்சிறந்த வழி. உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குவது மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டுதல், சரும பராமரிப்பு போன்றவை நிச்சயம் மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
நன்றாக சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும். அதேசமயம் போதுமான உடற்பயிற்சியும் அவசியம்.
மனம்விட்டு பேசவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் - மன அழுத்தத்தைக் குறைக்க உங்கள் நம்பிக்கைக்குரியவரிடம் மனம்விட்டு பேசவேண்டும். அதேபோல் அன்புக்குரியவர்களிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை. மனதிற்குள்ளேயே வைத்திருப்பது அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.
நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - ஒருவருடைய மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நேர்மறை எண்ணங்களும், நம்பிக்கைக்குரியவர்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். அதேசமயம் டாக்சிக் நம்பிக்கையும், டாக்சிக் நேர்மறையும் கொஞ்சம் தள்ளியே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.