வெப்பம் போய் மழையின் காலம் வரும்போது ஆரம்பத்தில் ஏதோ நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நாட்கள் ஆகஆக மழைக்காலத்தால் ஏற்படும் பாதிப்பும், உடல் உபாதைகளும் மிகுந்த சிரமத்திற்கு கொண்டு சென்றுவிடும்.
இப்படிப்பட்ட காலங்களில் எப்படி நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்று விளக்குகிறார் பொதுநல மருத்துவர் அருணாச்சலம்.
மழைக்காலங்களை பொறுத்தவரை இயல்பு நிலையை விட குளிர்ச்சி என்பது அதிகமாக இருக்கும். இது ஒரு 3 மாதங்களுக்கு தொடரும். இதற்கு முன்னதாக மாறி மாறி வெயில், மழை போன்ற காலநிலையின் மாறுபாடுகள் டெங்கு , ஃபுளூ போன்ற நோய்களை ஏற்படுத்தியது. ஆனால் இவற்றில் இருந்து தற்சமயம் கடந்து வந்துவிட்டோம். ஆனால் இந்த மழைக்கால கட்டத்தை பொறுத்தவரை நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம்.
இரவு நேர கொசுக்களின் காரணமாக மலேரியா அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் அடிமட்ட நிலத்தடி நீருடன் கழிவு நீரும் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கொதிக்க வைத்த தண்ணீரை உட்கொள்வது அவசியம்.
காலரா, டைப்பாய்டு, வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் ஏ அதாவது மஞ்சல்காமாலை ஏ தொற்று உணவின் மூலமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கழிவுநீர் கலப்பு காரணமாக கால்களில் தோல் வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மூக்கு வாய் தொண்டையை நன்கு மூடிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நம் உடலை வெப்பமாக வைத்து கொள்ளலாம்.
சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
காய் பழங்களை அதிகளவில் எடுத்து கொள்வது.
தண்ணீர் அதிகம் அருந்துவது அவசியம். உதாரணமாக டிசம்பர் மற்றும் மே மாத காலங்களில் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். அதேபோல் மே மாதத்தில் அதிக அளவு தண்ணீர் தாகம் ஏற்படும், மழைக்காலங்களில் தண்ணீர் தாகம் ஏற்படுவது இல்லை. அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்கக் கூடாது.
நம் உடலுக்கு ஒருநாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் என்பது தேவை . 7-12 மணி வரை 1 லிட்டர் தண்ணீரும், 2-7 மணி வரை அடுத்த 1 லிட்டர் தண்ணீரும் குடிப்பதால் இரவில் தண்ணீர் தாகமும் இருக்காது. சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
சைவமோ அசைவமோ எவ்வகையான உணவும் மலச்சிக்கலை வரவைக்கும். எனவே இவற்றை சரி செய்ய காய், பழம், தண்ணீரை சரியான அளவில் எடுத்துக் கொள்வது சிறந்தது.
இதை தவிர சுவாசக்குழாய் நோய்கள் எளிதில் பரவக்கூடியவை. எனவே இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது நல்லது, மேலும் வீடுகளில் இயற்கை காற்றோட்டத்தை அதிகரிப்பது நல்லது.
கைகளை நன்கு கழுவிவிட்டு சுடசுட நன்கு வேகவைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
குளிரூட்டபட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் முழிவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும்.
இதனை செய்வதன் மூலமாக பெரும்பான்மையான மழைக்கால நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் அருணாச்சலம்.