Pfizer, Moderna மற்றும் AstraZeneca போன்ற கோவிட் தடுப்பூசிகள் இதயம், மூளை மற்றும் ரத்தம் தொடர்பான கோளாறுகள் தொடர்பான பாதிப்புகளை உருவாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இது எந்த ஆய்வு? இதன் உண்மைத்தன்மை என்ன? இதுகுறித்து மருத்துவர் சொல்வதென்ன? பார்ப்போம்...
உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சி பிரிவான Global Vaccine Data Network-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர், 8 நாடுகளில் இருந்து 99 மில்லியன் தடுப்பூசி செலுத்தி மக்களை கொண்டு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வுதான் இதுவரை கோவிட் தடுப்பூசி தொடர்பான மிகப்பெரிய ஆய்வாகும்.
ஃபைசர் - பயோஎன்டெக் மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகளின் 1, 2, 3 ஆவது டோஸ்களை செலுத்தி கொள்ளும்போது myocarditis எனப்படும் இதயத்தில் இறுக்கம், வீக்கம், அழற்சிபோன்ற இதய பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றது. அதிலும் அதிக அளவு பாதிப்பு என்பது Moderna தடுப்பூசியின் இரண்டாம் தவணை எடுத்து கொண்ட பிறகுதான் ஏற்படுகிறது என்று Journal Vaccine என்ற இதழியலில் வெளியிடப்பட்ட மேற்குறிப்பிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
மற்றுமொரு இதய பாதிப்பாக உள்ளது Pericarditis. இவை, இதயத்தைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வில் (பெரிகார்டியம்) வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படுவதை குறிக்கிறது. இந்த பாதிப்பு என்பது AstraZeneca’s தடுப்பூசியின் மூன்றாம் தவணைக்குப் பிறகு 6.9 மடங்கு அதிகரித்து காணப்படுகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.
இதேபோல AstraZeneca’s தடுப்பூசி Guillain-Barre syndrome, அதாவது ரத்த உறைவு ஏற்படுவதற்கான ஆபத்தை உண்டாகிறது. மேலும் மாடர்னா தடுப்பூசி போடப்பட்ட பிறகு மூளை நரம்பியல் கோளாறும் ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்நிலையில் கோவிட் தொற்று உண்டானதில் இருந்து உலகம் முழுவதும் எத்தனை கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான our world in data மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி உலக மக்கள் தொகையில் 70.6% பேர் குறைந்தபட்சம் ஒரு கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். உலகளவில் 13.57 பில்லியன் டோஸ்கள் நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் 3,498 டோஸ்கள் இப்போது ஒவ்வொரு நாளும் நிர்வகிக்கப்படுகின்றன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 32.7% மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.
இப்படியாக உலகம் முழுவதும் தடுப்பூசி பரவியுள்ள நேரத்தில், இப்படியான ஒரு ஆய்வு முடிவு வந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை நிர்வாக ஜேக்கப் கிளான்வில்லே தெரிவிக்கையில், “கோவிட் 19-ல் பாதிக்கப்படும்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆபத்துகள் என்பது, தடுப்பூசிகளை பயன்படுத்தி ஏற்படும் ஆபத்தினைவிட அதிகமாக இருக்கும். ஆகவே தடுப்பூசி போடுவதுதான் பாதுகாப்பான தேர்வு” என்றுள்ளார்.
போலவே, தடுப்பூசிகள்தான் கொரோனாவின் கடுமையான தாக்கம் உட்பட இறப்பு வரையிலான தீவிரமான பாதிப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமக்கு பதிலளித்த அவர், “எந்தவொரு பயனுள்ள மருந்தாக இருந்தாலும் அதற்கு, ஒன்றிரண்டு பக்கவிளைவுகள் இருக்கக்கூடும். அதனால்தான் மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வலியுறுத்துகிறோம். கொரோனாவை பொறுத்தவரை, கொரோனா முதல் அலையின் போது ஏற்பட்ட பாதிப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகளில், அதாவது பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசியினை செலுத்திய பிறகு பாதிப்பின் தீவிரத்தன்மை என்பது படிப்படியாக குறைய தொடங்கியது.
ஆகவே கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை, தடுப்பூசியின் உதவி கொண்டு தடுத்துள்ளோம் நாம். அந்தவகையில், தடுப்பூசியின் உதவியால்தான் நம்மால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
மேலும் மாரடைப்பு போன்றவற்றால் ஏற்படும் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட ஆய்விலும் அரிதாகவே இந்த பாதிப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதை எண்ணி அஞ்ச வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.