உடல் எடையை குறைக்க சுயமாக மருந்துகள் எடுப்பவரா நீங்கள்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்

உடல் எடையை குறைக்க சுயமாக மருந்துகள் எடுப்பவரா நீங்கள்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்

உடல் எடையை குறைக்க சுயமாக மருந்துகள் எடுப்பவரா நீங்கள்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்
Published on

உடல் எடையை குறைக்க சுயமாக மருந்துகளை எடுப்பதன் விபரீதங்கள் என்ன? என்பது குறித்து மருத்துவர்கள் விளக்குகின்றனர். 

USFDA எனும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகளுக்கான தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, மருந்துகளுக்கான இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பும் சைபியூட்ரமின், பென்புளூரமைன், டெக்ஸ் பென்புளூரமைன் உள்ளிட்ட உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்துகளை ஏற்கனவே தடை செய்துள்ளன. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது மூளை பாதிப்பு, இதய வால்வுகள் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவை ஏற்பட்டதே இந்த மருந்துகள் தடை செய்யப்பட்டதற்கான காரணமாகும்.

தடைசெய்யப்பட்ட இதுபோன்ற மருந்துகள் இணைய வழியாகவோ அல்லது ஒரு சில மருந்தகங்களிலோ கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்தும்போது உடல் எடை உடனடியாக குறைந்து வெளிப்புற தோற்றம் மாறுவதால் ஒருசிலர் பக்கவிளைவுகளை அறியாமல் இவற்றை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இவற்றை நிறுத்தும்போது உடல் எடை மீண்டும் அதிகரிக்கும். அதுமட்டுமன்றி உடல் உறுப்புகளை பாதித்து வாழ்நாளை குறைக்கும் என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருந்தியல்துறை பேராசிரியர் சுதா.

ஐந்தாண்டு மருத்துவப் படிப்பில் இரண்டாம் ஆண்டில் கற்றுத் தரப்படும் மருந்தியல் படிப்பு மருந்துகள் எப்படியெல்லாம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, மருந்துகள் உடலில் செயல்படும் விதம், உடலில் இருந்து மருந்துகள் வெளியேறும் விதம், இறுதியாகவே மருந்துகளின் பயன்பாடு என பல உட்கூறுகளைக் கொண்டது.

உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகள் மட்டுமல்ல; சாதாரண பாரசிட்டமால் மாத்திரை கூட அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தக் கூடியது. அதன்பிறகு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். மாற்று கல்லீரல் உடனடியாக கிடைத்து அது பொருந்தி வருவதெல்லாம் உடனடியாக நடக்கக் கூடியதல்ல. எனவே இதுபோன்ற சுய மருத்துவ முடிவுகளை மக்கள் தவிர்ப்பதே உயிர் காக்க உதவும் என்கிறார் ராஜிவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன்.

ஒருவரின் உடல் எடைக்கு ஏற்பவே அவரது இதயம், ஈரல், சிறுநீரகம் என உடல் உறுப்புகளின் தன்மையும் இருக்கும். ஒருவர் ஒரே அடியாக துரிதமாக வெளிப்புற தசைகளை குறைக்கும் போது அதற்கேற்ப உள் உறுப்புகள் உடனடியாக தன்னை தகவமைத்துக் கொள்ளமுடியாது என்றும் தேரணி ராஜன் கூறுகிறார். உடல் எடையை குறைக்க மிகவும் எளிய நடைபயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள், தகுதியான மருத்துவர்களின் ஆலோசனைகள் இருக்க இதுபோன்ற விபரீதங்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

- சுகன்யா

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com