சரியாக ஒரு மாத இடைவெளிக்குள்ளாக தமிழகத்தில் 2 இடங்களில் அதிகளவில் கொரோனா பரவல் கண்டறியப்பட்ட நிலையில் High risk பிரிவில் வருவோர் என்ன செய்ய வேண்டும் ? பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்.
மூன்றாம் அலை முடிவடைந்த பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 க்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்களிடையே கொரோனா பரவல் மீண்டும் கண்டறியப்பட்டது. இதையடுத்த தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் Contact tracing, saturation முறை ஆகியவற்றின் மூலம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் ஐஐடி வளாகத்தில் உள்ள 7340 பேரில் பெரும்பாலானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 220 பேர் வரை தொற்று உறுதி செய்யப்பட்டு, அனைவரும் தனிமைப்படுத்தல் முடிந்து ஐஐடி வளாகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. இருப்பினும் தற்போது வரை அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 பேர் வரை தினசரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு அம்மாபேட்டை தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த 5 ஆம் தேதி கொரோனா பரவல் ஏற்பட்டதில் 900 பேரில் 72 பேருக்கு 4 நாட்களில் தொற்றுப்பரவல் கண்டறிப்பட்டது. மருத்துவத்துறையின் பரிசோதனை, தனிமைப்படுத்தல் ஆகிய துரித நடவடிக்கைகளால் இவை உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் உடனடியாக தயக்கமின்றி, போலி சமாதானம் செய்துகொள்ளாமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன்.
நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் இம்யூனோசப்ரசிவ் மருந்துகளை எடுத்துக் கொள்வோர், இதயம் - நுரையீரல் - கல்லீரல்- சிறுநீரகம் என உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்தவர்கள், புற்றுநோய் பாதிப்பு உடையோர் ஆகிய பிரிவினர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், அவசியமற்ற குழு கூடுகைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறார் அவர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர்
18 வயதுக்கு மேற்பட்டோரில்....
முதல் தவணை : 93.51 %.
இரண்டாம் தவணை : 81.7 %
12- 19 வயதுக்குட்பட்டோரில்...
முதல் தவணை : 88 %
இரண்டாம் தவணை : 70 %
60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன் களப்பணியாளர்களில் மூன்றாம் தவணை முடித்தோர் : 50%
மருத்துவத்துறையின் இந்த தரவுகளின் படி தமிழகத்தில் இன்னும் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையைக் கூட நிறைவு செய்யாமல் இருக்கும் சுமார் 40 லட்சம் பேர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், 4 ஆம் அலை ஏற்படாமல் தடுப்பூசியின் பங்குதான் முழு முதலானது என்பதை மக்கள் உணர வேண்டும். 80% க்கும் மேல் மக்களிடையே நோய் எதிர்ப்புத்திறன் ஏற்பட உதவியுள்ள தடுப்பூசியை முதல் மற்றும் இரண்டாம் தவணை இன்னும் செலுத்திக்கொள்ளாமல் இருப்பது தவறு என்கிறது மருத்துவத்துறை.