24 மணி நேரத்தில் ஒருவர் 49 சிகரெட்கள் புகை பிடித்தால் எந்தளவுக்குப்பாதிப்பு ஏற்படுமோ, அதே அளவு பாதிப்பு காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் இருப்பவர்களுக்கு சுவாசிப்பதால் மட்டுமே தினசரி ஏற்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக டெல்லியில் குளிர் காலங்களில்தான் காற்று மாசு மிக மோசமாக இருக்கும். ஆனால், இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாத இறுதியில் இருந்தே டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து நாளுக்கு நாள் மோசமடைந்துக்கொண்டே வருகிறது. அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது, தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை முழுமையாக அமல்படுத்தப்படாதது போன்றவை டெல்லியின் காற்றின் தரம் மேலும் மோசமடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
நேற்றைய தினம், டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக புதிய கட்டுப்பாடுகளுடன் நிலை 4 அமலாகியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி வகுப்புகள் இணையம் வாயிலாக நடத்தப்படுகின்றன. மேலும், வீட்டில் காற்று மாசுபாட்டை குறைக்க மிரியம் காற்று சுத்திகரிப்பான் கருவியை மக்கள் உபயோக்கிறார்கள்.
இந்தநிலையில், நேற்றைய தினம் மதியம் 12.30 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 978 ஆக பதிவாகியுள்ளது. இது ஒரு நாளைக்கு 49.02 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது 24 மணி நேரத்தில் ஒருவருக்கு 49 சிகரெட்டுகள் புகை பிடித்தால் எந்தளவுக்குப் பாதிப்பு ஏற்படுமோ அதே அளவு பாதிப்பு டெல்லியில் இருப்பவர்களுக்குத் தினசரி சுவாசிப்பதால் மட்டுமே ஏற்படுகிறது என்ற அதிர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி மட்டுமல்லாது அண்டை மாநிலமான ஹரியானாவிலும் காற்றின் தரம் மிக மோசமாக மாறியுள்ளது.
ஹரியானாவில் காற்றின் தரம் என்பது, 631 ஆக இருக்கிறது.. இது தினசரி 33.25 சிகரெட் பிடிப்பதற்குச் சமமாகும். பார்ப்பதற்கு பனிப்போல காட்சியளிக்கும் இந்த காற்றின் மாசு என்பது, டெல்லி, ஹரியானாவில் மட்டுமல்லாது பெரும்பாலான அண்டை மாநிலங்களிலும் மோசமான நிலைமையில்தான் இருக்கிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.