மருத்துவர் ஷர்மிகா மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ முறைகளுக்கான இயக்குநரகம் சித்த மருத்துவர் ஷர்மிகா மீதான புகார்களை விசாரிக்க குழு அமைத்துள்ளது. சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட அந்த குழுவின் முன் ஆஜராகி ஷர்மிகா விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் `குழந்தைப் பிறப்புக்கு கடவுள்தான் முதன்மை காரணம், நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகம் வளர்ச்சியடையும், ஒரு குலோப்ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ உடல் எடை ஏறும், குப்புறப்படுப்பதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளது, மாடு என்பது நம்மைவிட பெரிய விலங்கு என்பதால் அதன் இறைச்சியை சாப்பிடுகையில் செரிமான சிக்கல்கள் ஏற்படும்’ என்பது தொடங்கி மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கான சிகிச்சைகள், உடல் எடை குறைப்பு, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள், தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்னைகளுக்கான சிகிச்சைகள், உடல் உறுப்புகளின் அளவுகளுக்கும் உணவுகளுக்குமான தொடர்பு வரை பல தகவல்களை தன் வீடியோக்களில் பேசியிருந்தார்.
இவை அனைத்துமே சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆயுஷ் மருத்துவர்கள் பலரேவும் இக்கருத்துகளில் முரண்பட்டு பேசினர். நெட்டிசன்கள் பலரும், இவையாவும் ஆதாரபூர்வமற்றவை என்று விமர்சித்து வந்தனர். ஷர்மிகா தரப்பில், தான் குறிப்பிட்ட சில கருத்துகளில் `Human Error’ ஏற்பட்டிருப்பதாக அவர் சொல்லியிருந்தார். இருப்பினும் எதிலும் `Brain Error' இல்லை என்று கூறியிருந்தார் அவர். இந்நிலையில்தான் அவர் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.