2021 ஊட்டச்சத்து மாதம்: கோவையில் மக்கள் தொடர்பு கள அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள்

2021 ஊட்டச்சத்து மாதம்: கோவையில் மக்கள் தொடர்பு கள அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள்
2021  ஊட்டச்சத்து மாதம்: கோவையில் மக்கள் தொடர்பு கள அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள்
Published on

2021ஆம் ஆண்டு ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோயம்பத்தூர் மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் ஒருங்கிணைந்த தகவல் மற்றும் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேசிய ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்து 17.9.2021 அன்று கோயம்புத்தூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம், ஒருங்கிணைந்த தகவல் மற்றும் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ் வினீத், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நடமாடும் எல்இடி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மேலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மரக் கன்றுகளையும் அவர் வழங்கினார். ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச்சத்துத் திட்டம் குறித்த சிறப்புப் படத்தின் திரையிடல் நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியையும் அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து எய்ட்ஸ் மற்றும் காசநோய்களின் கட்டுப்பாடு, பதின்பருவ பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் விடுதலையின் அம்ரித் மஹோத்சவம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஜெய்வபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஊட்டச்சத்து மாதம் 2021 மற்றும் விடுதலையின் அம்ரித் மஹோத்சவம் பற்றிய துண்டுப் பிரசுரம் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

ரோட்டரி பாரதி மற்றும் ஸ்ரீ சரண் மருத்துவ மையம் ஆகியவற்றுடன் இணைந்து ரத்தசோகை, மெனோபாஸினால் ஏற்படும் மன அழுத்தம், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த சிறப்பு விழிப்புணர்வு மற்றும் 70 பெண்களுக்கு பரிசோதனை முகாம் நடைபெற்றது. மகப்பேறு மருத்துவர் மணிமேகலை பழனிச்சாமி, மெனோபாஸின்போது மன அழுத்தம் பற்றியும், ரத்தசோகையைக் கட்டுப்படுத்துவதற்காக பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நோய்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவு வகைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவமும் நிகழ்ச்சியின்போது எடுத்துரைக்கப்பட்டது. கோயம்புத்தூர் மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குநர் கரீனா பி தெங்கமம் மற்றும் உதவியாளர் எஸ் ஆர் சந்திரசேகரன் ஆகியோர் ஊட்டச்சத்து திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட அதிகாரி கே.மரகதம் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசுகையில், மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் நடவடிக்கைகளை எடுத்துக்கூறியதுடன் ஊட்டச்சத்து திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அங்கன்வாடி பணியாளர்களை கேட்டுக்கொண்டதுடன், கொரோனா நெறிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். திருப்பூர் மாவட்டத்தின் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் மாவட்ட கண்காணிப்பாளர் சி. சிவக்குமார், கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். ஊட்டச்சத்துத் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், திருப்பூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரி பி.ஜெயலதா ஆகியோர் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

ஆரோக்கியமான குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்துமிக்க உணவுகளை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற உணவு வகைகளை நேரடியாக சமைக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முழு உளுந்து பருப்பு தோசை, அடை, ராகி கேக், சிவப்பு அரிசி நூடுல்ஸ் உள்ளிட்ட ஏராளமான உணவுகள் இதில் இடம் பெற்றிருந்தன. ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் அடுப்பில்லாத சமையல் நிகழ்ச்சியில் பழரசங்கள், சாலட்கள் முதலியவை இடம்பெற்றிருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com