டெல்லியில் கடந்த சில நாட்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியின்போது, முடிவடைந்த 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என கணக்கிடப்பட்டது. 1982ஆம் ஆண்டுக்குப் பின் அங்கே ஜூலை மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை 107 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இந்த கனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பல சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அங்கு மழைக்கால நோய்களும் மக்களை பாதிக்கச் செய்துள்ளது. அந்தவகையில் டெல்லியில் தற்போது டைபாய்டு, மஞ்சள் காமாலை மற்றும் மேல் சுவாச தொற்றுடன் (upper respiratory infection) மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ராஜீவ் குப்தா கூறுகையில், “டெல்லியில் மேல் சுவாச நோய்த்தொற்றுகடன் டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வகை நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் முதியவர்களாக உள்ளனர். கழிவுநீர் நிரம்பி வழிவது கவலைக்குரிய விஷயங்களில் ஒன்றாகும். மழையின் போது தண்ணீர் மேலும் மாசுபடுவதால், இந்த பிரச்னையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இதுபோன்ற சீசன் நோய்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 55 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்தான். ஏனெனில் இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்ற வயதினருடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. மேலும் நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் இத்தகைய நோய்களுக்கு எளிதாக ஆளாகிறார்கள். அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மழைக்கால நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். தற்போதைய நோயாளிகள் பெரும்பாலும் மழைப்பொழிவு, வெப்பநிலை மாற்றம் தொடர்பான வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதுமட்டுமின்றி இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு காரணமாகவும் மருத்துவமனைக்கு மக்கள் வருகிறார்கள்” என்றுள்ளார்.
இதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக,
* தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.
* மழைக்காலத்தில் சாலையோர கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* உணவும், குடிநீரும் சுகாதாரமான முறையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகே சாப்பிட வேண்டும்.
* மழை நேரத்தில் கரும்பு ஜூஸ் உள்ளிட்ட பழச்சாறுகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* மழை நேரத்தில் வெட்டி வைத்து விற்கப்படும் பழங்களை சாப்பிடுவது நல்லதல்ல
போன்றவை சொல்லப்படுகின்றன.