வாழ்வியல் நோய்களாக இருக்கும் சர்க்கரை நோய், இதயநோய், மூட்டுவலி தொடங்கி புற்றுநோய் மாதிரியான பெரும் நோய்களுக்கும் கூட வழிவகுக்கும் முக்கிய பிரச்னையாக இருப்பது, உடல் எடை அதிகரிப்புதான். அதனாலேயே உடல் எடையை குறைப்பதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் எப்போதும் குறைவதில்லை. ஆனால் என்னதான் ஆர்வமாக இருந்தாலும் உடல் எடை சட்டென குறைந்துவிடுகிறதா, நன்மைகள் உடனேயே கிடைக்கின்றனவா என யோசித்தால், இல்லையென்பதே பதிலாக இருக்கிறது.
உடல் எடை குறைப்பில் முக்கிய அங்கமாக இருப்பது, நடைப்பயிற்சிதான். ஆனால் அதிலும்கூட ஒருவர் ஒருநாளுக்கு எவ்வளவு தூரம் நடந்தால் எடை குறையும், எவ்வளவு வேகத்தில் நடக்க வேண்டும் என்பதில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் நிலவிவருகிறது. இதற்கு மருத்துவர்கள் சொல்லும் எளிய பதிலாக இருப்பது, “தினமும் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்படி செய்தால் உடல்நிலை சீராக இருக்கும்” என்பதுதான்.
தற்போது இதன் நீட்சியாக இன்னொரு விஷயம் மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதன்படி, மாடிப்படி ஏறி வருவதால் இதய பிரச்னைகளை தவிர்க்கலாம், உடல் எடை குறைக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். என்னது மாடிப்படி ஏறுவதெல்லாம் ஒரு உடற்பயிற்சியா என்கின்றீர்களா? ஆம்… இப்போது படியேறுவதைகூட சர்வதேச அளவில் உடற்பயிற்சியாக பார்க்கதொடங்கிவிட்டார்கள். படியேறி இறங்கினால், உடல் செங்குத்தாக ஏறி இறங்கும் என்பதால், அதுவும் ஒருவகை உடற்பயிற்சிதான் எனக்கூறுகின்றார்கள் மருத்துவர்கள். இது வயதுக்கேற்ப, உடலின் அமைப்பு மற்றும் வேறு உடல் பிரச்னைகளுக்கு ஏற்ப அளவில் மாறுபடலாமாம்.
லிஃப்ட், எலிவேட்டர்களுக்கு பதிலாக தொடர்ந்து படிகளை தொடர்ந்து பயன்படுத்திவந்தால், தசைபிடிப்பு – உடல் பலவீனம் போன்ற வயது முதிர்வால் ஏற்படும் சிக்கல்களை எளிதில் வெல்லலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவற்றுடன் எடை இழப்பையும் இது ஊக்குவிக்கவும் என்றும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் வெறுமனே படியேறுவது மட்டுமே உடல் எடையை குறைத்திடாது. அத்துடன் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக்கிக்கொள்வது, உடலின் பிற நோய்களுக்கான உரிய மருத்துவ சிகிச்சைகள், எந்தளவுக்கு அன்றாடம் உடற்பயிற்சி செய்கின்றீர்கள் ஆகியவற்றையும் பொறுத்துதான் எடை சீராகும் என சொல்லப்படுகிறது!
இதுதொடர்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்ட சில ஆய்வுகளில், தினசரி படிக்கட்டுகளில் ஏறுபவர்களுக்கு வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, நோய்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக தெரிவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் படியேறுவது உடலில் எண்டோர்பின் ஹார்மோனை வெளியிடுகிறது என்பதால், உடலின் ஆற்றல் அளவும் அதிகரிக்குமாம்.
இவற்றுடன் படிக்கட்டுகளில் ஏறுவது உடலின் முக்கிய தசைகளை இணைக்கும் என சொல்லப்படுகிறது. இதயத்துக்கான பயிற்சியாகவும் இருக்குமாம். மேலும் படிக்கட்டுகளில் ஏறுவது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, அதாவது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது, இது இதய அமைப்பை மீள்தன்மையடையச் செய்கிறதாம். அத்துடன் உடல் கொழுப்பை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை சீர்செய்யும், தசைகளும் வலுப்பெறும்.
குறிப்பு: படியேறுவதால் இதயம் வலுப்பெறும், உடல் எடை குறையும் என்றபோதிலும் அதை அளவுக்கு மீறி செய்வது ஆபத்தாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதை பயிற்சியாக எடுத்து செய்பவர்கள் தொடக்கத்தில் 0 – 3 நிமிடங்களுக்கு மட்டும் படியேறினால் போதுமானது. ஏற்கெனவே உடல் உபாதைகள் இருப்பவர்கள், மருத்துவ ஆலோசனைப்படி மட்டுமே பயிற்சிகள் செய்யவேண்டும்.