ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. முன்பெல்லாம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை குறித்து பேசுவதே அரிதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறது. பெண்களின் உடல்நிலை, ஆரோக்கியம் பற்றி இப்போது அதிகம் பகிரப்படுகிறது. இது அவர்களின் ஆரோக்கியம் குறித்த அக்கறையை அதிகரித்துள்ளது.
உலகளவில் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று மார்பக புற்றுநோய். கேன்சர் செல்களை தூண்டும் பல காரணிகள் உடலில் உள்ளன. எனவே பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆரோக்கியமான டயட், முறையான உடற்பயிற்சி, புகைப்பிடித்தலை தவிர்த்தல் போன்ற பழக்கவழக்கங்கள் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். இதனுடன் குறிப்பிட்ட சில வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மார்பக புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். சில உணவுகள் மார்பக புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்கும்.
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி, ஃபோலேட், கரோட்டினாய்டுகள், குவெர்செடின், ஹெஸ்பெரிடின் மற்றும் ஃபிளாவனாய்டு ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை அடங்கியுள்ளன. இந்த ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப்பொருட்கள் அடங்கியுள்ளன.
பெர்ரீஸ்
தினசரி பெர்ரீ பழங்களை எடுத்துக்கொள்வது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. ஏனெனில் இவற்றில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் சேதமடைவதை தடுத்து, கேன்சர் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
ஆப்பிள் மற்றும் பேரிக்காய்
இந்த பழங்களிலுள்ள பாலிபெனால் போன்ற ஆண்டி ஆக்சிடண்டுகள் கேன்சர் செல்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த பழங்களை தினசரி சேர்த்துக்கொள்வது புற்றுநோய் வராமல் தடுக்கும். இவை தவிர, cruciferous காய்கறிகள் என்று அழைக்கப்படுகிற காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்றவை, பீன்ஸ், சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், பச்சை கீரைகள் போன்றவையும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.