கோமியம் மருத்துவ குணம் நிறைந்தது என்றும், புனிதமானதாகவும் கருதி குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம். கால்நடையின் சிறுநீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான பாக்டீரியாக்கள் உள்ளதாகவும், இதனை நேரடியாக குடிப்பது உகந்ததல்ல எனவும் தெரிவித்திருக்கிறது.
சாஹிவால், தர்பர்கார் மற்றும் விந்தவாணி போன்ற மூன்று வகையான மாடுகள், எருமைகள் மற்றும் மனிதர்களின் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தியதில் 14 வகையான ஆபத்தான மற்றும் அச்சுறுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் வயிற்று தொற்றுக்களை ஏற்படுத்தும் எஸ்கெரிச்சியா கோலை பாக்டீரியாவும் அடங்கும்.
Researchgate இதழில் வெளியான இந்த ஆய்வுக்கு 73 மாடுகளின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வானது மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் தோல் மற்றும் சளி சவ்வுகளில் பொதுவாக காணப்படும் பாக்டீரியாக்களான S epidermidis மற்றும் E Rhapontici போன்றவை குறித்து கண்டறிய நடத்தப்பட்டதாகும். போஜ் ராஜ் சிங் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், எருமையின் சிறுநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடானது பசுக்களை விட மிக உயர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வானது 2022ஆம் ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஆரோக்கியமான நபர்காளின் சிறுநீர் மாதிரிகளானது கணிசமான அளவு நோய்க்கிருமி பாக்டீரியாவைக் கொண்டுள்ளது தெரியவந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாடுகளின் சிறுநீரை மனிதர்கள் குடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பாக்டீரியா எதிர்ப்புத்தன்மை கொண்டது கோமியம் என்ற கருத்தையும் பொதுமைப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளனர்.
கோமியத்தில் நச்சு உள்ளது மற்றும் மனிதன் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று உலகளவிலான பல்வேறு ஆய்வுகள் விளக்குகின்ற போதிலும், கோமியத்தை குடிப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். Tropical Medicine and Hygiene என்ற இதழில் வெளியான ஒரு ஆய்வில், நைஜீரியாவில் பலருக்கும் ஏற்பட்ட வலிப்பு மற்றும் அதன் தாக்கங்களுக்கு நச்சுத்தன்மை நிறைந்த கோமியத்தை உட்கொண்டதே காரணம் என விளக்கியிருக்கிறது. மேலும், சில நேரங்களில் குழந்தைகளிடையே மரணத்தைக்கூட விளைவிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) வர்த்தக முத்திரை இல்லாமலேயே இந்தியாவில் பல மார்க்கெட்டுகளில் கோமியம் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தீவிரமாக பரவிய காலகட்டத்தில் கோமியம் மற்றும் மாட்டுச்சாணம் கொரோனா உட்பட பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என்ற கருத்து வெகுவாக பரவியது குறிப்பிடத்தக்கது.