வயிறு உப்புதல், வாயு பிரச்னை என்பது நம்மில் பலரும் அவதிப்படும் பிரச்னையாகும். இப்பிரச்னையை சரிசெய்ய ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன் கூறும் அறிவுரையை இங்கே காணலாம்.
வயிறு உப்புதல் போன்ற உணர்வு என்பது வயிறு முழுவதும் ஏதோ அடைத்த மாதிரியும் இறுக்கமாகவும் தோன்றுவதாகும். இது செரிமான மணடலத்தில் உள்ள உறுப்புகள் பெரிதாகியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இச்சமயத்தில் உடலின் குடலின் ஒரு பகுதியில் திட, திரவ, வாயு போன்றவை அடைத்து விடுகிறது. பிரசவ காலத்திலுள்ள பெண்களுக்கு வயிற்றின் தசைபகுதியானது மிகவும் வலிமையற்று காணப்படுவதால் எளிதில் இப்பிரச்சனை ஏற்படுகின்றது.
அஜீரணத்தின் காரணமாக வயிறு உப்புதல் மாதிரியான உணர்வும் அதுமட்டுமல்லாமல் வாயுவினால் அவதிப்படுதல் போன்ற பிரச்னையும் ஏற்படுகிறது. அஜீரணத்திற்கு முக்கியமான காரணம், அதிக அளவு உணவு உண்பது. குறிப்பாக அதிக அளவு கலோரிகள் நிறைந்த உணவுகளையும் அதிக கொழுப்புகள் அடங்கிய உணவுகளையும் எடுத்து கொள்வவதும் இதற்கு காரணமாகும்.
உதாரணத்திற்கு சிக்கன் பிரியாணியுடன் மட்டனையோ அல்லது மீன் வறுவலையோ சேர்த்து சாப்பிடும் போது இத்தகைய உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். இதை தவிர்ப்பதற்கு எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும்.
எடுத்துகாட்டாக அரை திரவ (semi solid) உணவுகளையும் எண்ணெய் பயன்படுத்தாமல் ஆவியில் வேக வைத்த உணவுகளையும் அதிகம் எடுத்து கொள்ளலாம்.
ஒரு சிலருக்கு குறிப்பிட்ட வகையான உணவுவகைகள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். அதனால் செரிமானப் பிரச்னை வரக்கூடும். உதாரணமாக சோயா, பால் போன்றவை எல்லோருக்கும் ஒரேமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆகவே அவரவருக்கு ஏற்ற உணவை அறிந்து அதை சாப்பிடுவது அவசியம்.
சீரக தண்ணீர், இஞ்ஜி டீ குடிக்கலாம்.
ஓம நீர் மட்டுமோ அல்லது அத்துடன் சிறிது வெற்றிலையை சேர்த்தோ சாப்பிடலாம்.
இஞ்ஜி சாறுடன் எலுமிச்சை சாறு, ஜீரகத்தை சேர்த்து சாப்பிடலாம்.
இச்சமயத்தில் அடுத்த 2 நாட்களுக்கு எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
சன்னா மற்றும் கட்லெட் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கையில் வயிற்று வலி, அதிருப்தியான உணர்வு போன்றவை ஏற்படக்கூடும்.
அதிலும் சில கடைகளில் சில சமயங்களில் சன்னா, ராஜ்மா, அரிசி போன்றவை சீக்கிரமாக வேக வேண்டும் என்பதற்காக சோடா உப்பு சேர்க்கப்படுகிறது. இது வயிறு உப்புதல் போன்ற உணர்வு ஏற்பட காரணமாக அமைகிறது. ஆகவே முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்த்துவிடவும். வீட்டிலும் சோடா உப்பு பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துவிடவும்.
மேலும் வறுத்த உணவுகள், ஜங்க் உணவுகள், காரமான உணவுகள், குளிர் பானங்கள், இனிப்புகள், சாக்லேட் போன்றவற்றையும் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்
இத்தகைய அஜீரண உணர்வு ஏற்படும் போது முதலில் சுடுநீரை ஆற வைத்து குடிக்க வேண்டும்.
அப்போதும் சரியாகவில்லை என்றால் தண்ணீரில் 5 நிமிடத்திற்கு சீரகத்தை கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பட்டர் சேர்த்து சுட சுட அந்த நீரை அருந்தலாம்.
மிளகு மற்றும் சீரகத்தை நீரில் ஊறவத்து பின்பு நன்கு அரைத்து எடுத்துக்கொண்டு, பிறகு இஞ்சி சாற்றையும் சிறிது எலுமிச்சையையும் தனித்தனியாக எடுத்து கொள்ளவும். தயாரித்த இஞ்சி சாறுடன் அரைத்த மிளகு சீரகத்தை சேர்த்து இறுதியில் அத்துடன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் இல்லை என்றால் அக்கலவையுடன் சிறிது தேனையும் சேர்த்து கொள்ளலாம். நீரிழிவு நோயாளியாக இருந்தால் தேனுக்கு பதில் சிறிது உப்பை சேர்த்து கொண்டு குடிக்கலாம்.
இதிலும் சரியாகவில்லையென்றால் 2 வெற்றிலையுடன் 1/4 டீ ஸ்பூன் ஓமத்தை எடுத்துக் கொண்டு நன்கு அதனை மென்று சாப்பிட வேண்டும்.
நார்த்தங்காய் இலை மற்றும் ஓமம், சிவப்பு மிளகாய், சிறிது உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் பொடிக்கு வேப்பிலை கட்டி என்று பெயர். இதனை சாதாரண நீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடிக்கலாம்.
வீட்டில் தயாரிக்கும் சூப் வகைகளை குடித்துவரலாலாம். காய்கறிகளை நன்கு வேகவைத்து அரைத்து அத்துடன் சிறிது உப்பு, குறுமிளகு சேர்த்து சூப் போல தாயாரித்து சாப்பிடலாம். இதில் சோள மாவு அல்லது பட்டர் போன்றவற்றை சேர்ப்பதை தவிர்த்து விடவும்.
அதிக அளவு எளிதில் ஜீரணம் அடையும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
பொங்கலுடன் குறைந்த அளவு நெய்
இடியாப்பத்துடன் தேங்காய் பால்
இட்லியுடன் கொத்தமல்லி சட்னி
குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி தோசை, உடன் கொத்தமல்லி சட்னி
மிளகு ரசம், ரசம் சாதம்
பீன்ஸ், கேரட், மோர்
போன்ற உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இவற்றுடன் வேக வைத்த பச்சப்பயிறுடன் இஞ்சி மற்றும் சீரகத்தை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.