உலகளவில் அதிக காரம் நிறைந்த உணவுகளை சமைப்பதில் இந்தியா எப்போதும் முன்னிலையில் இருக்கிறது. அனைவராலும் விரும்பத்தக்க, அதேசமயம் தவிர்க்கமுடியாத சுவைகளை அள்ளிக்கொடுக்கும் மையமாக திகழ்கிறது இந்தியா. குழம்பு, பொரியல் முதல் ரைத்தா வரையிலும் சிறிதேனும் கார சுவையை சேர்ப்பதை நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதுபோன்ற மரபுகளை பின்பற்றுவதை ஆயுர்வேதா போன்ற பழமையான மருத்துவமும் ஊக்குவிக்கிறது.
அதிக கார உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என நிபுணர்கள் சில நேரங்களில் எச்சரித்தாலும், ஆயுர்வேதா இதற்கு மாறாக சொல்கிறது. சத்துக்களை உறிஞ்சுதல், ஜீரணம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மசாலாக்கள் ஊக்குவிப்பதாகக் கூறுகிறது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்தும் பாதுகாப்பதாகக் கூறுகிறது. உடற் பருமன், இதய நோய்கள் மற்றும் பல் பிரச்னைகள் வராமல் தடுத்து இயற்கையாகவே உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது.
இருப்பினும் சிலர் மசாலா உணவுகளை விரும்பினாலும் எரிச்சல் உணர்வு, அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்னைக்கு பயந்து அவற்றை தவிர்த்துவிடுவர். இவர்களுக்கு ஆயுர்வேத சிறந்த தீர்வை வழங்குகிறது. சில எளிய வழிகளை பின்பற்றுவதன்மூலம் மிளகு, மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்த உணவுகளை எந்தவித செரிமான பிரச்னைகளுமின்றி மகிழ்ச்சியாக சாப்பிடலாம்.
ப்ரோபயோட்டிக் சேர்த்துக்கொள்ளவும்: மசாலா பொருட்களின் வீரியத்தை குறைக்கும் இயற்கை வழிகளில் ஒன்று தயிர் சேர்த்தல். உணவுடன் ரைத்தாவாகவோ அல்லது உப்பு, மிளகு உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிடலாம். இது காரமான உணவுகளின் சுவையை குறைக்காமல் அதேசமயம் எரிச்சல் ஆகாமல் நடுநிலையாக வைத்திருக்கும்.
அதிமதுர டீ: காரமான மசாலா சேர்த்த உணவுகளை எடுத்துக்கொண்ட பிறகு அதிமதுர டீ குடிப்பது எரிச்சல் ஏற்படாமல் தடுக்கும். ஒரு இஞ்ச் அதிமதுர வேரை 2 கப் நீர் ஊற்றி ஒரு கப் ஆகும்வரை நன்றாக கொதிக்கவிட்டு, வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்.
இடையே கார உணவு: உணவு சாப்பிட தொடங்கும்போது சிறிது இனிப்புசுவை கொண்ட உணவுடன் தொடங்கவேண்டும். பிறகு சிறிது உப்பு சுவை உணவு, அடுத்தே கார உணவுகளை சேர்க்கவேண்டும். பின்னர் கடைசியாக ஜில்லென ஏதேனும் ஒன்றை சாப்பிட காரம் தெரியாது.
மிளகாயை குறைக்கவும்: சிவப்பு அல்லது பச்சை மிளகாய்க்கு பதிலாக, பெருங்காயம், பூண்டு அல்லது கருப்பு மிளகை சேர்க்கவும். இது எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை.