மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் முதன் முதலாக பொருத்திக் கொண்ட நபர் இரண்டு மாதங்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளார். மருத்துவ துறையில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்பட்ட இந்த உறுப்பு மாற்று சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவமனை இதனை உறுதி செய்துள்ளது.
57 வயதான டேவிட் பென்னட் என்பவருக்கு கடந்த ஜனவரி 7-ஆம் தேதியன்று அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு டேவிட், தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகளுக்கு இருக்கும் டிமாண்ட் இதன் மூலம் வரும் நாட்களில் தீரலாம் என்ற நம்பிக்கையை இந்த சிகிச்சை ஏற்படுத்தியது. தற்போது இந்த சிகிச்சையை செய்து கொண்டவர் உயிரிழந்திருந்தாலும் வரும் நாட்களில் இது நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக இந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.