கடந்த 29 ஆண்டுகளிலேயே 2023ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலேயே பாதிப்பு அதிகளவில் பதிவாகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் உலக அளவில் 75 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு சுமார் 80 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 26 விழுக்காடு பாதிப்பு இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 10 விழுக்காடும், சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் தலா 6.8 விழுக்காடும், பாகிஸ்தானில் 6.3 விழுக்காடும் காசநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 55 விழுக்காடு ஆண்களும், 33 விழுக்காடு பெண்களும் அடங்குவர். 12 விழுக்காடு சிறுவர்-சிறுமிகளும், இளம்பருவத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், காசநோயால் கடந்த 2023ஆம் ஆண்டு சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.