பராமரிப்பு இல்லாத, சுத்தம் இல்லாத ஏரி, குளம், குட்டை, தேங்கியுள்ள நீர்நிலைகள் போன்றவற்றில் இருக்கும் Primary amoebic meningoencephalitis எனப்படும் அமீபாக்களால் ஏற்படும் நோய்தான், மூளையை திண்ணும் அமீபா (Brain Eating Amoeba). இதன் தாக்கம் நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்து வருகிறது.
அரிதான நோயான இத்தொற்று மேற்குறிப்பிட்ட இடங்களில் சென்று குளிக்கும்போது, மூக்கின் வழியாக முளையை அடைந்து அங்குள்ள திசுக்களை முற்றிலுமாக அழித்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த தொற்றின் பாதிப்பு கேரளாவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்தவகையில், சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடை சேர்ந்த 4 வயது சிறுவன் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக உடல்நலக்குறைவிற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மூளையை உண்ணும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சிகர தகவல் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் நடத்தப்பட்ட பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பிசிஆர்) சோதனையில் இச்சிறுவனுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் இச்சிறுவன், தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “ஜெர்மனியிலிருந்து பெறப்பட்ட மில்டெஃபோசின் (miltefosine) என்ற மருத்தின் மூலம் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் மருந்து கிடைத்துள்ளது. தற்போது சிறுவன் ஆபத்தான நிலையை கடந்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் இவ்வகை தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி பாதிக்கப்பட்ட ஏழாவது குழந்தை இச்சிறுவன். கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் கோழிக்கோடை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் மிருதுல், கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தட்சிணா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஃபட்டுவா என மூன்று சிறுவர்கள் இவ்வகை தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அஃப்னான் ஜாசிம் என்ற 14 வயது சிறுவன் இத்தொற்றுலிருந்து மீண்டுள்ளார். இதேபோல, திருச்சூரை சேர்ந்த 12 வயது சிறுவன் முழுமையாக குணமடைந்துள்ளார். இந்தவகையில், கண்ணூரைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.