அண்மை காலமாக மாரடைப்பால் இறந்து வருபவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. சதாரணமாக 50 வயதுக்கு மேல் தான் மாரடைப்பு ஏற்படும் என்றிருந்த நிலை மாறி தற்போது சிறுவயதினரையே பாதிக்கும் அளவிற்கு நிலமையானது மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில், இதனை மீண்டும் மெய்பிக்கும் வகையில் குஜராத்தில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் ராஜ்காட் மாவட்டம் ஜஸ்டான் பகுதியை சேர்ந்தவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சாக்ஷி ரஜோசாரா. இவர் அப்பகுதியில் உள்ள ஷாந்தபா கஜேரா என்ற பள்ளியில் பயின்று வருகிறார். நேற்று அவர் பயின்ற பள்ளியில் தேர்வு நடைபெறவே தேர்வு எழுதுவதற்காக வகுப்பறையினுள் நுழைந்த சாக்ஷி திடீரென சுருண்டு விழுந்தார். மயங்கியதாக நினைத்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறவே பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
முன்னதாக மாணவி மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்ததை கூட அறியாமல் மயக்கத்தில்தான் இருக்கிறார் என்று எண்ணி மருத்துவமனையில் கொண்டு சேர்த்த நிகழ்வு அப்பகுதியினரிடையே சோகத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பிரேத பரிசோதனையின் முடிவில்தான் மாணவிக்கு ஏற்பட்ட மாரடைப்பின் பிண்ணனி என்னவென்று அறியமுடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர்களிடம் ‘மாணவி உடல் நலக்குறைவுடன் இருந்தாரா, இதய நோய் தொடர்பான பாதிப்புகள் ஏற்கனவே அவருக்கு இருந்து வந்துள்ளதா’ என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாரடைப்பினால் ஏற்பட்ட உயிரழப்பு என்பது புதிதல்ல, சமீபத்தில் குஜராத்தில் நடைப்பெற்ற நசராத்திரி சிறப்பு பாரம்பரிய நடனமான கர்பா நடன நிகழ்ச்சியின் போதும் 10 க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் அதிகளவு உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா மாரடைப்பு குறித்து கூறுகையில், ’அதிக வேலை, அதிக உடற்பயிற்சி போன்றவற்றை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் மேற்கொள்ள வேண்டாம்’ என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில், 15 வயது சிறுமி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் என்பது மாரடைப்பால் ஏற்படும் மரணங்களை குறித்து அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.