ஆரோக்கியமான உடல், உடலுக்கு தகுந்த எடை, சீரான இதய துடிப்பு, சமமான உடல் வெப்பநிலை, சரியான ஹீமோகுளோபின் அளவு போன்றவை இருப்போர், பல பரிசோதனைகளை செய்தபின்னர் ஒரு யூனிட் ரத்தம் அதாவது 350 மிலி வரை ரத்த தானம் செய்யலாம். இதில் பல கட்டுப்பாடுகளும் உண்டு. இப்படி பல நிபந்தனைகளை தாண்டி ஒருவர் ரத்தம் தானம் செய்வது, அதன்மூலம் இன்னொருவரின் உயிரை காக்க வேண்டும் என்பதற்காகத்தான். இப்படி ஒருவர் ரத்த தானம் வழங்குகையில், அது அவருக்கும் உடலில் பல்வேறு நன்மைகளை தருகிறது
ஆனால் இதுவே ஆபத்தானால் என்ன ஆகும்? அதுவும் ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ஒருவரின் ரத்தம் இன்னொருவருக்கு பரிமாற்றப்பட்டால்...? அதுவும் ஏற்கெனவே வேறொரு தீவிர பாதிப்புள்ள ஒரு குழந்தைக்கு செலுத்தப்பட்டால்..? நினைத்து பார்க்கவே நடுங்கும் இப்படியொரு கொடூரம்தான் உ.பி.யில் நடந்துள்ளது.
ரத்ததானம் கொடுத்தவர்களிடமிருந்து உயிருக்குப்போராடிய நிலையில் ரத்தம் பெற்றுக்கொண்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 14 குழந்தைகள், தற்போது ஹெபடைட்டிஸ் பி, சி மற்றும் ஹெச்.ஐ.வி போன்ற நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கான்பூர் எல்.எல்.ஆர் மருத்துவமனையின் (இங்குதான் இந்த மாபெரும் குற்றச்செயல் நடந்துள்ளது) குழந்தை மருத்துவப் பிரிவின் தலைவரும், இந்த மையத்தின் நோடல் அலுவலருமான டாக்டர் அருண் ஆர்யா ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “பாதிக்கப்பட்ட இந்த ஹெபடைட்டிஸ் நோயாளிகளை இரைப்பைக் குடலியல் துறைக்கும், ஹெச்.ஐ.வி நோயாளிகளை கான்பூரில் உள்ள பரிந்துரை மையத்திற்கும் அனுப்பிவைக்க பரிந்துரைத்துள்ளோம்.
இந்த குழந்தைகள் எல்லோரும் ஏற்கெனவே வேறொரு பாதிப்பில் இருந்தனர். இப்போது இதனால் இன்னும் தீவிரமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரத்ததானம் பெறப்படும் போது, ‘சம்பந்தப்பட்ட நபரின் ரத்தம் செலுத்துவதற்கு பாதுகாப்பானதானதா?’ என்பதை உறுதி செய்துதான் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இருப்பினும் எவரொருவரும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும்போது, குறிப்பிட்ட காலம் வரை அது எந்த வகையான வைரஸ் தொற்று என்பதை கண்டறிய முடியாது. அந்த கால அளவை, விண்டோ பீரியட் என்று குறிப்பிடுவர். இந்த விஷயத்திலும் விண்டோ பீரியட் இருந்தோரின் ரத்தம் பெறப்பட்டிருக்கலாம். மாவட்ட நிர்வாகம் விரைந்து காரணத்தின் ஆணிவேரை கண்டறியும்.
மற்றொருபக்கம், ரத்தம் பரிமாற்ற சமயத்தில் ஹெபடைட்டிஸ் பி என்ற தொற்றுக்கு எதிராக அக்குழந்தைகளுக்கு மருத்துவர்கள் தரப்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்” என்றுள்ளார்.
இந்த குறிப்பிட்ட செண்டரில் குழந்தைகள் மட்டுமன்றி 180 தலசீமியா நோயாளிகளும் ரத்தம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு சோதனை நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் அந்த செண்டரால் 6 மாதத்துக்கு ஒருமுறை தொடர் கண்காணிப்பில் உள்ளவர்களென தெரிகிறது. ஆகவே அவர்களுக்கு பாதிப்பு இருக்காது என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட இந்த 14 குழந்தைகள் 6-16 வயது உடையவர்கள். இவர்களில் 7 பேர் ஹெபடைட்டிஸ் பி-யினாலும், 5 பேர் ஹெபடைட்டிஸ் சி-யினாலும் 2 பேர் ஹெச்.ஐ.வி யினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.