WTC இறுதிப் போட்டி: ஹசல்வுட் விலகல்! இந்திய அணிக்கு செக் வைக்க புதுமுக வீரரை களமிறக்கும் ஆஸி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் விலகியிருப்பதாக ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Michael Neser - Josh Hazlewood
Michael Neser - Josh HazlewoodTwitter
Published on

ஐபிஎல் 2023 ஃபீவர் முடிவடைந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நோக்கி திரும்பியுள்ளது. 2021ஆம் ஆண்டு இந்திய அணி WTC கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக பார்க்கப்பட்டது. முதல் முறையாக நடத்தப்பட்ட WTC ஃபைனல் என்பதாலும், மழைக்குறுக்கிட்டு போட்டியை நியூசிலாந்து அணிக்கு சாதகமான ஒரு நிலைக்கு கொண்டு சென்றதாலும் கோப்பையை தவறவிட்டது இந்திய அணி. அப்போதைய தோல்விக்கு பிறகு பல முன்னாள் வீரர்கள், இந்த கோப்பை இந்தியாவிடம் இருந்து மழை பறித்துக்கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

India vs Aus
India vs AusTwitter

தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் WTC இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி இந்தமுறையாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 7ஆம் தேதி தொடங்கப்படவிருக்கும் இறுதிப்போட்டிக்காக இந்திய வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டெஸ்ட் பவுலரான ஜோஷ் ஹசல்வுட், இறுதிப்போட்டியிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர் காயத்தால் அவதிப்பட்டுவரும் ஹசல்வுட்!

தொடர்ச்சியான போட்டி அட்டவணையால் காயம் ஏற்பட்ட நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து கூட 3 போட்டிகளுக்கு பிறகு டிராப் செய்யப்பட்டார் ஹசல்வுட். பக்க வலியால் அவதிப்பட்டுவரும் அவர், ஆஸ்திரேலியாவின் கடைசி 19 டெஸ்ட் போட்டிகளில் நான்கில் மட்டுமே விளையாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 2021 தொடக்கத்தில் இருந்து முதல் தர ஆட்டங்களில் கூட பங்கேற்காமல் இருந்துவந்தார் ஹசல்வுட். இருப்பினும் உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான பெயர் பட்டியலில் அவருடைய பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

Josh Hazlewood
Josh HazlewoodTwitter

இந்நிலையில், ஐபிஎல் முடிந்த பிறகு கூட, WTC இறுதிப்போட்டியில் முழு உடற்தகுதியுடன் பங்குபெறுவேன் என்று கூறியிருந்தார் ஹசல்வுட். மே 31ஆம் தேதியன்று நடந்த உடற்தகுதி தேர்வில் வெற்றிபெற்று மீண்டும் அணிக்குள் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அணியிலிருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆஷஸ் தொடருக்கான அணியில் ஹசல்வுட் இடம்பிடித்துள்ளார்.

BBL-ல் 26 விக்கெட்டுகள், கவுண்டியில் 19 விக்கெட்டுகளுடன் ப்ரைம் ஃபார்மில் இருக்கும் நெஸர்!

WTC இறுதிப்போட்டியானது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளருக்கும், இந்திய அணியின் டாப் ஆர்டருக்குமான பலப்பரீட்சை என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் பேக்கப் பவுலர்களாக, மைக்கேல் நெஸ்ஸர் மற்றும் சீன் அபோட் இருவரும் இங்கிலாந்தில் விளையாடி சிறப்பாகவே தயாராகியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மைக்கேல் நெஸ்ஸர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

சமீபகால கிரிக்கெட்டில் வலது கை ஆல்ரவுண்டரான மைக்கேல் நெஸ்ஸர் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார். பிக்பேஸ் லீக் தொடரில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த அவர், தற்போது நடைபெற்றுவரும் கவுண்டி சாம்பியன் போட்டியிலும் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 5 போட்டிகளில் விளையாடி 311 ரன்களை குவித்திருக்கும் அவர், 50 சராசரியோடு ஒரு சதத்தையும் பதிவுசெய்துள்ளார். இந்திய அணியை பொறுத்தவரையில் சட்டீஸ்வர் புஜாராவும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியில் நம்பர் 1 பவுலரான பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இருவரும் திரும்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com