நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட மொழியை நாம் முன்னிலும் பொறுப்பாகக் கையாளப் போகிறோம். கண்கள் இல்லையென்றால் காட்சி இல்லாததைப்போல் தமிழ்மொழி இல்லையென்றால் நம்முடைய இன்றைய அடைவுகள் எவையுமே இல்லை என்று உணர்ந்திருக்கிறோம். அவரவர்க்கு அவரவர் மொழிதான் எனினும் நமக்குத் தமிழ்மொழி. இந்தக் கட்டுரைத் தொடரில் நம் மொழியை எவ்வாறெல்லாம் புறக்கணித்துச் சென்றிருக்கிறோம் என்பதனை ஆங்காங்கே விரிவாக எடுத்துரைத்தேன். இனிமேற்கொண்டு இம்மொழியை எவ்வாறெல்லாம் கைப்பற்றிச் செல்லலாம் என்பதற்கான வழிமுறைகளையும் பார்த்தோம். மொழிக்கு நாம் எங்கேனும் தீங்குகள் இழைத்திருந்தால் அவை நம் அறியாமையால் ஏற்பட்டவையேயன்றி மனமறிந்து செய்தவையல்ல. மொழியைச் சீர்படுத்தவும் செம்மைப்படுத்தவும் வளப்படுத்தவும் இவற்றைச் செய்யவேண்டும் என்று தெரிய வந்த பிறகு செய்யாமல் இருப்போமா ? அந்நல்லுணர்ச்சியைத் தூண்டும் வகையில்தான் இத்தொடர் எழுதப்பட்டது.
மொழியை நன்கறிந்த பெரியவர்கள் மிகவும் தளர்ந்துபோய்விட்டார்கள் என்கின்ற உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும். அவர்கள் புகழ்பெற்ற தமிழாசிரியர்களாக இருக்கலாம். பேராசிரியர்களாக இருக்கலாம். பழுதற எழுதிப் புகழடைந்தவர்களாக இருக்கலாம். எல்லாலோருக்கும் முதுமை என்ற ஒன்று வந்துவிடுகிறது. காலம் கண்ணிமைக்கும் வேளையில் கடந்துபோய்விடுகிறது. மனதளவில் அவர்களுடைய ஊக்கம் சற்றும் குறைந்ததன்று எனினும் இயல்வது என்ற ஒன்றிருக்கிறதே. முன்புபோல் ஊக்கமாகவும் ஓடியாடியும் தமிழைப் பேணும் செயல்பாடுகளில் அவர்களால் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல் போகலாம். புதிய இணையக் கருவிகளின், செயலிகளின் பயன்பாட்டு முறைமைகளோடு தம்மைப் பொருத்திக்கொள்ள முடியாமல் தடுமாறுபவராக இருக்கலாம். பொருளியல் நெருக்குதல்கள், உறவுச்சறுக்கல்கள் என எதுவோ ஒன்று அவர்களுடைய செயலைக் குறைத்திருக்கலாம். அப்பெருமக்களின் வெற்றிடத்தை நாம் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் உணர்ந்தேயுள்ளோம். அவர்கள் தத்தம் கடமையைச் செய்துவிட்டுக் களைப்பாறும் காலத்திற்குச் சென்றுவிட்டார்கள். இனியந்தச் சுடரை ஏந்திச் செல்லவேண்டிய பொறுப்பு யாருடையது ? இளையவர்களாகிய உங்களுடையது. எங்களுக்கு என்ன தெரியும் என்று தட்டிக்கழிக்கவே முடியாது. இனி இளைய தலைமுறையினர்தான் தமிழைக் காத்து நிற்கவேண்டும். ஏனென்றால் தமிழைக் காக்கும் பொறுப்பிலிருந்த பெரியவர்களின் தள்ளாமையை, பிணிநிலையை அருள்கூர்ந்து மனதிற்கொள்க. அவர்களின் தலைச்சுமையை மாற்றிக்கொள்க.
எங்களால் என்ன செய்ய இயலுமென்று இளையோர் தவிப்புறலாம். எங்கும் தமிழ் எதிலும் தமிழென்ற நிலையை உருவாக்குவதற்கு உள்ளம் துடிக்கிறதுதான். அந்நிலையைத் தோற்றுவிக்க யாம் என்ன செய்யவேண்டுமென்ற தெளிவில்லையே என்ற குழப்பம் வேண்டா. அதற்காக அஞ்சவே வேண்டா. இன்று தொடக்கமாகட்டும். இதனை முன்பே செய்திருக்கலாமே என்கின்ற எண்ணம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏற்படுவதுதான். அவற்றில் ஒன்றுதான் இயன்றவிடங்களிலெல்லாம் தமிழைப் பயன்படுத்துதல். சரியோ தவறோ தமிழில் எப்பாடுபட்டாவது எழுதத் துணிவது. பேசும்போது பெரிதாகத் தெரியாது, பழக்கவழக்கத்தை முன்வைத்து எப்படியோ பேசிவிடுவோம். எழுதும்போதுதான் அங்குமிங்கும் முட்டிக்கொண்டு நிற்போம். எல்லா ஐயங்களும் வரிசைகட்டி நிற்கும். அதற்குரிய தீர்வை நாடி எழுதி முடிப்பதற்குள் நாத்தள்ளிவிடும்.
தொடக்கத்தில் அவ்வாறுதான் இருக்கும். ஆனால், மீண்டும் மீண்டும் முயன்றால் தமிழின் அனைத்து ஐயங்களையும் தாண்டிய மிகச்சிறந்த எழுத்தினை எழுதத் தொடங்குவீர்கள். மீறிப்போனால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு எண்ணி ஆயிரம் ஐயங்கள் தோன்றலாம். மக்களுக்குத் தோன்றும் தமிழ் ஐயங்களின் கூட்டல் எண்ணிக்கை ஆயிரம் என்று அறுதியிட்டுக் கூறுகிறேன். நாளொன்றுக்கு ஒன்று ஒன்றாக ஐயம் தீர்த்துக்கொண்டே வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எண்ணி மூன்றாமாண்டு முடிவில் ஐயந்தீர்த்த மனத்தினராய் முழுத்தமிழறிவு பெற்றிருப்பீர்கள். இப்போது உங்களைச் சுற்றியுள்ள பெருங்கூட்டத்தினரின் ஐயங்களைக் களையும் பொறுப்பை ஏற்றிருப்பீர்கள். மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகள் செல்லும்போது நீங்களே தமிழறிஞருக்கு நிகரான மொழியறிவு பெற்று வளர்ந்து நிற்பீர்கள். இவ்விடத்தில் நீங்கள் முழுமலர்ச்சி பெற்றுவிட்டீர்கள். இம்மொழியின் தலைமைக்காப்பாளரும் ஆகிவிட்டீர்கள். இவ்வாறுதான் எவ்வொரு மொழியறிஞரும் தோன்றுகின்றார். தமிழை நன்கு அறிந்தவராய் விளங்குவதற்கு யாருக்குத்தான் கசக்கும் ?
அறிவுத் தொடர்ச்சியினுடைய நிகழ்காலப் பொறுப்பினை ஏற்றுக்கொள்கின்ற வரலாற்றுக் கடமையினைச் செய்ய முன்வருகின்றீர்கள். இளையவர்கட்குக் கவிதை எழுதுவதில் இயல்பிலேயே ஒரு நாட்டம் இருக்கும். சிலர் கதையெழுதவும் முற்படக்கூடும். இவ்வார்வத்திற்கு வேர்நீர் ஆவது மொழியின்மீதான காதல்தான். ஒன்றைச் சொல்லிப் பார்ப்பதில் அல்லது எழுதிப் பார்ப்பதில் கிடைக்கின்ற படைப்பின்பம் மொழியினால் விளைவது. நம் மொழியைத் திறம்படக் கையாள்கிறோம் என்ற நிறைவினால் தோன்றுவது. இந்நாள்களில் கதை, கவிதை என்றுகூட மேம்பட எண்ணவேண்டியதில்லை. முகநூலிலோ சிட்டுரையிலோ நல்ல கருத்துடைய ஒரு சொற்றொடரை எழுதுவதும் படைப்பின்பத்தை நல்குவதுதான். அவற்றின்வழியாகவும் மொழியைச் செம்மையாகக் கைக்கொள்வதும் பயிற்சியெடுப்பதும் இயலும். நீங்கள் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் சரி, அவ்வழியில் தொடர்ந்த நடைபோடுங்கள். செயற்கரிய செயல்களைச் செய்திருப்பீர்கள்.
என்னுடைய பயணமும் இவ்வாறு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்த நடைதான். பிழையில்லாமல் எழுதுவது, இலக்கணக் குற்றமில்லாமல் எழுதுவது போன்றன தமிழறிஞராய்ச் செயல்படத் தொடங்கியவருக்கு இயற்கையான பண்புதான் என்றே கொள்க. இத்தொடரில் ஆங்கிலம், வடமொழி உள்ளிட்ட பிறமொழிச் சொற்களைக் கலவாது எழுதி வந்திருக்கிறேன் என்பதை அறிவீர்களா ? ஒருவேளை ஒன்றிரண்டு கலந்திருப்பின் அது பயன்பாட்டுச் செப்பமுற்ற ஒரே காரணத்திற்காகத்தான் இருக்கும். இங்கே காரணம் என்ற சொல்லை வடமொழி என்று சிலர் கருதலாம். என்னுடைய மொழியாராய்ச்சியில் காரணம் என்ற சொல் தமிழென்ற முடிவை அடைந்திருக்கிறேன். (கார் அணம், கார்த்தல் – தோன்றுதல், அணம் தொழிற்பெயர் விகுதி) இம்முறையில்தான் எவராயினும் நகர்ந்து நகர்ந்து நன்னிலை பெற்றாக வேண்டும். எடுத்த எடுப்பிலேயே எனக்குக் கைவராது என்று நழுவிவிடாதீர். மனத்தடைகளை மீறிய தொடர்ச்சியான இயக்கமே எல்லா நலன்களையும் ஈர்த்துத் தரும். இங்கே தொடர்ச்சியான செயல்பாடு என்பது மிகவும் இன்றியமையாதது. வெல்வோர்க்கும் தோற்போர்க்குமிடையேயுள்ள ஒரே வேறுபாடு தொடர்ச்சியான செயல்பாடுதான். தொடர்ச்சியான பயிற்சி பெறுபவர் முதிர்நிலை எய்துகிறார். விட்டு விட்டு முயல்பவர் அரைகுறை முயற்சியாளராக நிற்கிறார். தொடர்ச்சியான பயிற்சி பெற்றவரிடம் அரைகுறை முயற்சியாளர் தோற்பதுதான் வாழ்க்கையின் சுருக்கம்.
இத்தொடரினை நிறைவுசெய்ய வேண்டிய இவ்விடத்தில் எனக்குள் என்னென்னவோ எண்ணங்கள் படையெடுக்கின்றன. யாவற்றையும் கூறிவிடத் துடிக்கிறேன். இவ்வொன்றோடு நம் உரையாடல் வாய்ப்பு முற்றும் போடப்படுவதில்லையே. மீண்டும் மீண்டும் உரையாடத்தானே போகிறோம் ? அப்போது தொடர்ந்து மேலும் பேசுவோம். வாழ்க தமிழ் !