கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்படும் ப்ரீ நேடல் யோகாவின் பலன்கள்

கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்படும் ப்ரீ நேடல் யோகாவின் பலன்கள்
கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்படும் ப்ரீ நேடல் யோகாவின் பலன்கள்
Published on

பிரசவகாலத்தில் செய்யப்படும் ப்ரீ நேடல் (pre natal) யோகா குறித்து, சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவர் வரலட்சுமியிடம் பேசினோம்.

ப்ரீ நேடல் யோகா என்றால் என்ன? அதன் பயன்கள்?

”பிரசவத்தை எளிய, சுகமான அனுபவமாக மாற்றி விடக்கூடிய யோகப் பயிற்சிகள்தான் ப்ரீநேடல் யோகாவாக பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் தகுந்த நிபுணரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் கவனமாக இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். உடலில் சோர்வு ஏற்பட்டால், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு பயிற்சிகளைத் தொடரலாம். 

முதல் மூன்று மாதங்களுக்கு மிக மிதமான யோகப்பயிற்சிகளான பத்மாசனம், ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து வரவேண்டும். 4 மாதத்திலிருந்து குத தசைகளை உறுதியாக்கும், இடையின் எலும்புகளை பிரசவத்திற்கு ஏற்றவாறு இலகுவாக்கும் எளிதான யோகப் பயிற்சிகளை தகுந்த நிபுணரின் துணையோடு செய்துவரவேண்டும்.

யோகப் பயிற்சியின் பலன்கள்: பிரசவகாலச் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க உதவும். கால் சுரப்பு மற்றும் வீக்கம் வராமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு முதுகு வலி வராமல் தடுக்கும். இடுப்புத் தசைகள் மற்றும் கர்ப்பப்பை வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, குழந்தை வரும் வழியைத் தயார்படுத்தி, சீர்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல் அசதியைப் போக்கி, உடலை தளர்ந்த நிலையில் வைப்பதற்கும் யோகா பெரும் துணை புரிகிறது”.

ப்ரீ நேடல் யோகா செய்யவேண்டுமென்றால் முன்பே யோகப் பயிற்சிகளை செய்திருக்க வேண்டுமா?

”முன்னதாக யோகா செய்யாமல் இருந்தாலும் ப்ரீ நேடல் யோகா வகுப்புகளுக்கு செல்லலாம். ஆனால் மருத்துவர், நிபுணரின் அறிவுறுத்தலின் பெயரில், முதல் சில வாரங்களுக்கு உடலை இலகுவாக்கும் சிறு சிறு ஃப்ளெக்சிபிளிட்டி யோகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ப்ரத்யேகமான மருத்துவ காரணங்கள், உடல் உபாதைகள் ஏதும் இருந்தால், அதை நிச்சயமாக யோகா நிபுணருக்கு தெரியப்படுத்த வேண்டும்”.


ப்ரீ நேடல் யோகாவின் உளவியல் ரீதியான பயன்கள் என்னென்ன?

”ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக கர்ப்ப காலத்தின் முதல் சில வாரங்களுக்கு, கர்ப்பிணிப் பெண்கள் பலரும் மூட் ஸ்விங்ஸ் எனப்படும் உளவியல் சிக்கலை, அழுத்தத்தை எதிர்கொள்வார்கள். அத்தகைய மூட் ஸ்விங்ஸிற்கு யோகா பெருமருந்து. யோகா செய்வதால் ஏற்படும் இலகுத்தன்மை அவர்களது உளவியலிலும் நேர்மறையாக பிரதிபலிக்கும். இத்தகைய நல்ல மனநிலை தொடர்ந்தால், பிறக்கும் குழந்தையின் உளவியல் நலனும் சிறப்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com