இன்று எழுத்துலகின் ராஜா எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த இவரின் இயற்பெயர் ரங்கராஜன். 1935-ம் வருடம் மே மாதம் 3ஆம் தேதி சீனிவாசராகவன், கண்ணம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர். இவருக்கு ஓர் அண்ணனும் ஒரு தம்பியும் உண்டு. அப்பாவின் வேலை நிமித்தமாக இவர் தனது பாட்டி வீட்டில் வளர்ந்தார். ஶ்ரீரங்கம் ஆண்கள் பள்ளியிலும் புனித வளனார் கல்லூரியிலும் படித்தவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி.யில் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்கை முடித்தார். சுமார் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட நாவல்கள், கட்டுரைகள், மேடை நாடகங்கள் , திரைப்படங்களில் கதை வசனம் என்று எழுத்து சம்பந்தப்பட்ட எல்லா விதங்களிலும் கால் தடங்களைப் பதித்தவர்.
இவரது முதல் கதை எஸ். ரங்கராஜன் என்ற பெயரில் “எழுத்தில் ஹிம்சை” என்ற தலைப்பில் சிவாஜி என்ற பத்திரி்கையில் 1958 நவம்பர் 29ம் தேதி வெளிவந்தது. இவரது முதல் நாவல் ’14வது மாடி‘ என்பர். ஆனால், 1960-ல் அவர் எழுதிய ‘நைலான் கயிறு‘ என்ற நாவல் முதலில் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து கரையெல்லாம் செண்பகப்பூ, 24 ரூபாய்த் தீவு, கனவுத் தொழிற்சாலை, கொலையுதிர் காலம், நைலான் கயிறு, நில் கவனி தாக்கு, 14 நாட்கள், வானமென்னும் வீதியிலே, அனிதா இளம் மனைவி, ஜன்னல் மலர், நிர்வாண நகரம்,ஸ்ரீரங்கத்து தேவதைகள், மேற்கே ஒரு குற்றம், மறுபடியும் கணேஷ் என்று பல நாவல்களை எழுதியுள்ளார்.
1992ஆம் ஆண்டு ஆ...! என்ற புதுவித பாணியில் ஒரு நாவலையும் இவர் எழுதி இருந்தார். இதன் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் 'ஆ' என்றுதான் முடியும். பெரும் வரவேற்பு பெற்ற இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு வந்ததுதான் விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' திரைப்படம்.
இவரது படைப்புகள் அத்தனையும் ரத்தினங்கள். இதைப்பற்றி எழுதவேண்டும் என்றால் எழுதிக்கொண்டே போகலாம். நாலாயிரத் திவ்விய பிரபந்த பாசுரங்களில் ஈடுபாடு கொண்ட சுஜாதா சில பாசுரங்களை எளிய முறையில் புதிய நடையில் மறு உருவாக்க முறையில் தந்துள்ளார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு கொண்ட சுஜாதா பல கவிதைகளை எளிமையுடன் மொழி பெயர்த்துள்ளார். இவரது நாவல்களில் துப்பறியும் நாவல், அறிவியல் நாவல் என்ற இரு பிரிவுகளைக் காணலாம்.
இன்றைய காலகட்டத்திலும் எல்லா வாசகர்களையும் கட்டிபோடக்கூடியது இவரது எழுத்து. இவரது நாவல்களில் கணேஷ், வசந்த் பாத்திரங்கள் மிகப்பிரபலம். ஷெர்லக் ஹோம்ஸ் - டாக்டர் வாட்ஸன் போல கணேஷ் - வசந்த் இணை இருக்கும் நாவல் வருகிற வாரப்பத்திரிகை என்றாலே மக்கள் க்யூவில் நின்று வாங்கிய காலமெல்லாம் உண்டு. மக்களிடையே தனது கதைகளின் வாயிலாக அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக இவருக்கு 1993-ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான NCTC விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தேர்தலில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சுஜாதா தலைமையிலான குழுதான் முதன் முதலில் வடிவமைத்தது. இதனால் பல தடங்கல்களை எதிர்கொண்டு இறுதியில் வெற்றிப்பெற்றார். இது குறித்து அவர் கூறுகையில் , “இறுதியில் வென்றது காங்கிரசோ பி.ஜே.பி யோ அல்ல, டெக்னாலஜிதான்” என்று . இந்தக் கண்டுபிடிப்பிற்காக புகழ்பெற்ற ’வாஸ்விக்’ விருதை சுஜாதா பெற்றார். நிமோனியா என்று அப்போலோவில் சேர்க்கப்பட்ட அவர் 2008, பிப்ரவரி 27 அன்று காலமானார்.