தினமும் நீங்கள் இதனை சரியாக செய்கிறீர்களா..? கவனிக்க...!

தினமும் நீங்கள் இதனை சரியாக செய்கிறீர்களா..? கவனிக்க...!
தினமும் நீங்கள் இதனை சரியாக செய்கிறீர்களா..? கவனிக்க...!
Published on

உலக தூக்க தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் மக்கள் குறைவான நேரமே தூங்குவதால் அதனால் ஏற்படும் விளைவுகளை இங்கே தெரிந்துகொள்வோம்.

பிறந்த குழந்தைகள் ஒரு நாளுக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குகின்றன. குழந்தைகள் வளர வளர அவர்களின் தூக்க நேரமும் குறைகிறது. விளையாட்டு, உலகத்தை பார்த்து ஒவ்வொன்றாக கற்றல் என அவர்களின் உலகம் விரிவடைகிறது. ஆனால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பின்பு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்குதல் அவசியம். வேலைப்பளு, மன அழுத்தம் என எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும் குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் கட்டாயமான ஒன்று. அப்படி நீங்கள் சரியான நேரம் தூங்கவில்லை என்றால் உங்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வரலாம். அது என்னவென்று நாமும் அறிவோமா..?

பேருந்து பயணம், ரயில் பயணம், திருவிழா இரவு, நண்பர்களுடன் அரட்டை போன்றவற்றால் உங்களுக்கு ஓரிரு நாட்கள் தூக்கம் கெட்டால் நீங்கள் பயப்பட தேவையில்லை. அடுத்த நாட்கள் சிறிய அளவிற்கு சோர்வு இருக்கும். ஆனால் தொடர்ச்சியாக தூக்கமின்மையால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் உங்கள் உடலுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

உடல் பருமன் அதிகரிப்பு

தூக்கமின்மையால் உங்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கலாம். சராசரி அளவை விட குறைந்த நேரம் தூங்குபவர்களுக்கு இப்பிரச்னை அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தையின்மை, உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு உடல் பருமன் அதிகரிப்பு ஒரு காரணமாக சொல்லப்படும் நிலையில், தூக்கம் குறைந்தால் உங்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கலாம் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்.

கர்ப்பகால நீரிழிவு

பொதுவாக கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு வாந்தி, மயக்கம், உடல் சோர்வு என பல பிரச்னைகள் இருக்கும். ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் இருக்கும். ஆனால் இது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் சில பெண்கள் கர்ப்ப காலங்களில் மிக குறைந்த அளவில் தூங்குகிறார்கள். அவர்களுக்கு மற்ற கர்ப்பிணி பெண்களை விட அதிகளவிற்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மனஅழுத்தம்

சிலர் ராக்கோழியாகவே மாறிவிடுவார்கள். எந்த வேலையும் இருக்காது. ஆனால் வேண்டுமென்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, சமூக வலைத்தளங்களில் நேரத்தை கழிப்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி தங்களது தூக்கத்தை தொலைத்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மன அழுத்த பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கினால் கூட மனஅழுத்தம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் வருமாம்.

ஞாபக மறதி

குறைந்த தூக்கம் ஞாபக மறதிக்கு வழிவகுக்குமாம். அத்தோடு படைப்பாற்றல் திறனும் அறவே இல்லாமல் போய்விடுமாம். போட்டிகள் நிறைந்த உலகில் நாளுக்கு நாள் விதவிதமாக சிந்தித்து அதனை செயல்படுத்துபவர்களால்தான் ஜொலிக்க முடிகிறது. அப்படி இருக்கும்போது தூக்கம் குறைந்தால் சிந்திக்கும் திறன் குறையுமாம். எல்லாவற்றிற்கும் மேலாக முகமும் வறண்டு போன தோற்றத்தில் இருக்குமாம். பொலிவுத்தன்மை குறைந்து காணப்படுமாம். எனவே சின்ன சின்ன பிரச்னைகளிலிருந்து தப்பிக்க குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்கி விடுங்கள்

என்ன முயற்சித்தாலும் தூக்கம் அவ்வளவு எளிதாக வருவதில்லை என நினைப்பவர்களுக்கும் சில டிப்ஸ் இருக்கிறது

• தூங்க செல்லும்முன் பல விஷயங்களை குழப்பிக்கொண்டே படுக்கையறை செல்லக்கூடாது.

• மொபைலால் தூக்கம் கெடுபவர்கள் தூங்கச் செல்லும்முன் அதனை நகர்த்தி வைத்துவிட்டு தூங்கச் செல்லலாம்

• மனதை அமைதிப்படுத்திவிட்டு தூங்குவது சிறந்தது. அது காலை எழும்போது சிறந்த புத்துணர்ச்சியை தரும்

• தூங்கச் செல்லும்முன் புத்தகங்கள் வாசிப்பது சிறந்தது. டென்ஷன் இல்லாத தூக்கத்திற்கு இதுவும் ஒரு சிறந்த வழிதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com