மனித குலத்தின் அறிவு மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுக்கும் தாய்மொழியைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதியன்று உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் 1952ம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் ஜனவரி 1998ல் முன்மொழிந்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு நவம்பரில் இந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து 2000த்திலிருந்து உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
‘பன்மொழி கல்வியின் வாயிலாக நிலையான எதிர்காலத்தை நோக்கி’ என்ற வாசகத்தின் அடிப்படையில் நடப்பு 2017ம் ஆண்டின் உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்படும் என்று யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நாளில் ஒவ்வொரு மொழிக்குழுவினரும், தங்கள் மொழியைக் கொண்டாடும் விதமாக இலக்கிய செழுமை குறித்த கருத்தரங்கள், கலந்துரையாடல்களை நிகழ்த்துமாறும் யுனெஸ்கோ கேட்டுக்கொண்டுள்ளது.
என்றும் இளமை குன்றா தமிழ்
காலத்துக்கேற்ப ஒரு மொழி, தன்னை புதுப்பித்துக் கொண்டே வந்தால்தான் அது பரிணாம வளர்ச்சிக்கேற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஏராளமான தொன்மொழிகள் அத்தகைய தகவமைப்புத் திறன் இன்றி வழக்கொழிந்து போயுள்ளன.
இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இயேசு பயன்படுத்தியதாகக் கூறப்படும் அராமியா மொழி இன்று வழக்கிலேயே இல்லை. உலக அளவில் கடந்த நூறு ஆண்டுகளில் வழக்கில் இருந்த மொழிகளின் எண்ணிக்கை 7,000-த்திலிருந்து 3,000மாக குறைந்துள்ளதாக மொழியியல் ஆய்வுகள் கூறுகின்றன.
உலக மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே செரிவான கலாசாரக் கூறுகளை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகள் அடங்கிய இந்த பட்டியலில் நமது தாய்மொழி தமிழுக்கு சிறப்பான இடமுண்டு. கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி எனப் புகழ் பெற்ற தமிழ் மொழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்கள் தோன்றி விட்டன. தொன்மையான மற்றும் பழமையான மொழிகள் பல அழிந்த நிலையில், தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும் இப்போதும் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு இளமையுடன் திகழ்கிறது.