வீரத்துக்கு உதாரணமாக எப்போதும் நாம் சிங்கத்தைதான் சுட்டிக்காட்டுவோம். ஏனென்றால் உலகின் எந்த மூலையில் இருக்கும் காடாக இருந்தாலும் அங்கு சிங்கம் இருந்தால் அதுதான் 'காட்டின் ராஜா'. அப்படிப்பட்ட சிங்கத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா தொடங்கி உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்களின் பேனர்களில் "தமிழகத்தின் சிங்கமே" (ஆனால் தமிழகத்தில் சிங்கமே இல்லை என்பது வேறு விஷயம்) என பெயர் சூட்டும் அளவுக்கு கம்பீர விலங்கு சிங்கம்.
வனவிலங்குகளில் அச்சமூட்டக்கூடிய ஒரு படைப்பாக விளங்குகிற சிங்கத்திற்கு மரியாதையை செலுத்தும் இந்த நிகழ்வினை, 'பிக் கேட் ரெஸ்க்யூ' என்னும் அமைப்பு உருவாக்கியது.
இந்த நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் மக்கள் ஒன்று கூடி தங்களால் இயன்ற வகையில் சிங்கத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature’s) சிங்கத்தை அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக பட்டியலிட்டுள்ளது.
நீண்ட வரலாறு
சிங்கங்களை பொறுத்த வரை, மனிதர்களோடு அதற்கு உள்ள தொடர்பு என்பது, 32 ஆயிரம் வருடங்களாகத் தொடர்கிறது. பிரான்சின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள, அர்டேக் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 'பேலியோலித்திக்' கால மனிதனின் குகை ஒவியங்களில் கூட சிங்கங்கள் பற்றிய ஓவியங்கள் காணப்படுகின்றன.
வரலாற்று ரீதியாக சிங்கங்கள், யூரேசியா, வட அமெரிக்கா வழியாக தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சஹாரா பகுதிகளை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவின் வட மேற்கு பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே காணப்பபடுகின்றன. ஆனால் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன.
உலகளவில் சிங்கங்கள்
25 ஆப்பிரிக்க நாடுகளில் இப்போது சிங்கங்கள் பெருமளவு வசிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பகுதிகளில் 30 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இப்போது 20 ஆயிரமாக குறைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்தவரை வேட்டையாடுதல் இன்னும் போதியளவு கட்டுப்படுத்தப்படாததாலும் சூழலியல் பாதிப்பாலும் சிங்கங்களின் எண்ணிக்கை மளமள என குறைந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை குஜராத் வனப்பகுதியான கிர் தேசியப் பூங்காவில் அதிகளவில் சிங்கங்கள் வசிக்கிறது.
இந்தியாவில் எண்ணிக்கை
இந்தியாவில் 2015-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 523 சிங்கங்கள் இருந்தது. இதனையடுத்து மீண்டும் 2020 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 674 ஆக உயர்ந்தது. மொத்தமுள்ள 674 சிங்கங்களில் 206 ஆண், 309 பெண் மற்றும் 137 குட்டிகள் உள்ளன. மீதமுள்ளவை அடையாளம் காணப்படவில்லை. சிங்களுக்கு திடீரென பரவும் தொற்றுநோய்கள், ஒரே குடும்பங்களுக்குள் நேரும் இனச்சேர்க்கையினால் பலவீனம் அடைதல், இடநெருக்கடிகளால் காடுகளை விட்டு வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித – விலங்கு மோதல்கள் போன்ற பிரச்னைகளை ஆசிய சிங்கங்கள் எதிர்கொள்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் எப்போது சிங்கத்தை நேரில் ரசிக்கலாம்?
குஜராத் மாநிலம், ஜுனாகத் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிர் தேசிய பூங்காவில் 520 ஆசிய சிங்கங்கள் உள்ளன. இந்த பூங்காவுக்கு ஆண்டுதோறும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சமமாக வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். வரும் நவம்பர் மாதம் சுற்றுலா சீசன் தொடங்கும். மேலும் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக நான்கு மாதங்கள் கிர் பூங்கா பராமரிப்புக்காக மூடப்படும்.
மேலும் பருவமழைக் காலமான இந்த 4 மாதங்கள் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலம். சிங்கம், புலி, சிறுத்தை உள்பட பல விலங்கினங்கள் இந்த காலத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஆண்டுதோறும் இந்த காலத்தில் பூங்கா மூடப்படும்.மழை அதிகம் பெய்யும் காலம் என்பதால் சாலைகள் மோசமான நிலையில் இருக்கும். வனப் பகுதிக்குள் எளிதாக பயணிக்க முடியாது. அது சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்தானதாக இருக்கும். அதுமட்டுமன்றி, நவம்பர் மாதம் சீசன் தொடங்கவுள்ளதால், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.