இன்றைய தேதியில் உலகில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணிகளில் முதலிடத்தில் உள்ள காரணி, இதயப் பிரச்னைகள்தான். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 17.9 மில்லியன் இறப்புகள் இதய பாதிப்புகளால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதய பாதிப்பு என்பதில், இதய வால்வுகளில் ஏற்படும் பிரச்னை - இதய தசையில் ஏற்படும் பிரச்னை - ரத்தக் குழாயில் ஏற்படும் பிரச்னை போன்றவையாவும் அடங்கும். அதிகப்படியான இறப்புகளை ஏற்படுத்தும் இதய பிரச்னையாக இருப்பது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம்தான் (5 இதய பாதிப்பு மரணங்கள், 4 மாரடைப்பு / பக்கவாதம் காரணமாக ஏற்படுகிறது) என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தச் சூழலை சரிசெய்ய, இதயம் சார்ந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதய பாதிப்புகள் இந்தளவுக்கு அதிகரித்ததன் பின்னணி குறித்தும், இதய பாதிப்பிலிருந்து ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இதய நோய் நிபுணர் விஜய் சேகரிடம் பேசினோம்.
“இதய பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை போலவே, இதய பாதிப்பு ஏற்படுவோர் வயதும் குறைந்துள்ளது. அந்தவகையில் இப்போதெல்லாம் 25 - 40 வயது உடையவர்களுக்கெல்லாம் இதய பாதிப்புகள் வருகிறது. குறிப்பாக மாரடைப்பு விகிதம் அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது. இதற்கு முக்கிய 5 காரணங்களை சொல்கிறேன்.
* முழுமுதல் காரணம், புகைப்பழக்கம். இவையாவும் ரத்த நாளங்களை எளிதில் சுருக்கிவிடும். மேலும் ரத்த உறைதல் தன்மையை அதிகரிக்கும். 20 - 21 வயதில் புகைப்பிடிக்கத் தொடங்கும் ஒரு நபர், 35 - 40 வயதை எட்டும்போது அவர் 10 ஆண்டு புகைப்பிடித்ததன் விளைவையே எதிர்கொள்வார். இதற்கு முந்தைய தலைமுறையிலும் இளவயதில் புகைப்பிடித்தார்கள்தான் என்றாலும்கூட, இன்று அந்த எண்ணிக்கை மிக மிக உயர்ந்துள்ளது. ஒரு சிகரெட் புகையில், 92 நச்சுகள் உள்ளன. புகையை போலவே நச்சுப்பழக்கமும் மிக மோசமான காரணம்.
* அடுத்தது மன அழுத்தம். இன்றைய தேதியில் மிக அதிகமான மன அழுத்தத்தில் பலரும் இருக்கிறார்கள். மனநல மருத்துவரை நாடுவதில் இருக்கும் தயக்கம் காரணமாக, பல நேரங்களில் மன அழுத்தத்திலேயே மக்கள் இருக்கிறார்கள். நாள்பட்ட இந்த அழுத்தம், நிச்சயம் இதய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
* அடுத்தபடியாக, மாறுபட்ட வாழ்க்கைமுறை இருக்கிறது. மெட்ரோ சிட்டிகளில் இருக்கும் அதிகப்படியான மாசுக்காற்று, ஜங்க் ஃபுட் உணவுவகைகள், மிகக் குறைவான உடலுழைப்பின்மை போன்றவையாவும் இதயத்தை பலவீனமாக்குகின்றன.
* அடுத்த காரணமாக உடல் சார்ந்த சிக்கல்கள். அதாவது இணை பிரச்னைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ரத்த அழுத்தம் சீரற்று இருப்பது, மிக அதிக உடல் பருமன், ரத்த சர்க்கரையளவு சீரற்று இருப்பது, கொலஸ்ட்ரால் அளவு சீரற்று இருப்பது போன்றவையாவும் மறைமுகமாக இதயப் பிரச்னைகளை கொண்டுவரும். தற்போது நம்மையெல்லாம் ஆட்டிப்படைத்துக் கொண்டிஉர்க்கும் கொரோனா வைரஸ்கூட, பக்கவிளைவாக இதயப்பிரச்னைகளை ஏற்படுத்த வல்லதுதான்.
* அடுத்தது, மரபு காரணமாக ஏற்படும் இதய பாதிப்புகள். இதை நம்மால் தடுக்க முடியாது என்பதால் முழுமையான மருத்துவ வழிகாட்டுதலை பின்பற்றுவது அவசியம்.
இவற்றை சரிசெய்ய இதய நலனில் அக்கறை காட்டுவது அவசியம். முக்கியமாக அதீத படபடப்பு, அடிக்கடி வியர்ப்பது, கால் வீக்கம், வயிறு வீக்கம், எடை அதீதமாக அதிகரிப்பது, இறவு உறக்கத்தில் சிரமம், அடிக்கடி தலைச்சுற்றுவது, சீரற்ற இதயத்துடிப்பு போன்றவையேதும் தெரியவந்தால் மருத்துவ ஆலோசனை கட்டாயம். முடிந்தால் எகோ அல்லது இ.சி.ஜி. பரிசோதனை செய்துக்கொள்ளவதும் நல்லது.
ஒருவேளை பரிசோதனையில் ஏதேனும் இதயபாதிப்புகள் தெரியவந்தால், உரிய மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான பரிசோதனைகள் செய்து இதய நலனை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை எந்த பாதிப்பும் தெரியவரவில்லையென்றாலும்கூட, 3 - 5 ஆண்டுக்கு ஒருமுறை இதய நலனை உறுதிசெய்துக்கொள்வது மிகவும் நல்லது.
இந்த வழிமுறைகளை பின்பற்றி, இதய நலனை உறுதிசெய்துக்கொண்டால் நிச்சயம் நம்மை நாம் தற்காத்துக்கொள்ளலாம்.
இந்த ஆண்டு இதய தினத்துக்கான தீம், ‘உலகளாவிய அளவில் இதய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த டிஜிட்டல் ஆரோக்கியத்தின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்பது. அதாவது டிஜிட்டல் தளங்களின் உதவியுடன் வீட்டுப்பெரியவர்கள் மற்றும் நம் நேசத்துக்குரியவர்களின் இதய நலனை மக்கள் அனைவரும் உறுதிசெய்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் தீம். ஆக, இவ்வருடம் நம் நலனை மட்டுமன்றி, நமக்கான பிறரின் நலனையும் காப்போம்!” என்றார் மருத்துவர்.
இதய நலன் காப்போம்... நமக்கும் நமக்கானவர்க்கும்!