சுற்றுச் சூழல் தினமும்; சூழல் காக்க போராடும் தமிழகமும்..!

சுற்றுச் சூழல் தினமும்; சூழல் காக்க போராடும் தமிழகமும்..!
சுற்றுச் சூழல் தினமும்; சூழல் காக்க போராடும் தமிழகமும்..!
Published on

இந்த ஆண்டு உலக சுற்றுச் சூழல் தின விழாவை உலக அளவில் முன்னின்று நடத்துகிறது இந்தியா. கடந்த 2011ஆம் ஆண்டிலும் இந்த தினத்தை இந்தியாவே முன்னின்று நடத்தியது. உலக மக்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் நம் இந்திய அரசு, தனது மாநிலங்களில் சூழலைப் பாதுகாக்க என்ன செய்கிறது?

இந்தியாவின் அமைதிப் பூங்கா என்ற நிலையில் இருந்து, ‘இந்தியாவிலேயே அதிகம் போராடும் மாநிலம்’ – என்ற நிலைக்கு மாறி இருக்கிறது தமிழகம். இந்தப் போராட்டங்களில் பெரும்பாலானவை சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கவும் முன்னெடுக்கப்பட்டவை. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

கூடங்குளம்:

ஒப்பந்தம் கையெழுத்தான 1988 ஆம் ஆண்டில் இருந்து, 2011 ஆம் ஆண்டுவரை கூடங்குளம் அணு உலைக்கு எதிராகக் கடுமையாகப் போராடினார்கள் இடிந்தகரை மக்கள். உலக அளவில் திரும்பிப் பார்க்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், போராட்டக்காரர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு ‘அணுக்கழிவுகளின் கதிர் வீச்சு சுற்றுப் புறங்களில் உள்ள மக்களைப் பாதிக்கும்’ என்பதுதான். போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்த அரசால் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

‘கூடங்குளத்தில் இருந்து எவ்வளவு அணுக் கழிவு வெளியேறுகிறது, அதை எப்படி அப்புறப்படுத்துகிறீர்கள்?’ – என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் தரப்பில் இருந்து கடைசிவரை உரிய பதில் அளிக்கப்படவில்லை. இன்றும் அப்பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராகப் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.  ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது’ – என்று இந்திய அரசு கூடங்குளத்தை இயக்கிவரும் இதே காலக்கட்டத்தில், உலகெங்கும் வளர்ந்த நாடுகளே அணு உலைகளை மூடி வருகின்றன, அணு உலைகளுக்கு எதிராகப் போராடிய அமைப்புகளுக்கு நோபல் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நியூட்ரினோ:

தேனி மாவட்டம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான அனுமதியை 2011ல் வழங்கியது மத்திய அரசு. நியூட்ரினோ துகள் குறித்த ஆய்வுகள் எதிர்கால தொழில் நுட்பங்களுக்குப் பயன்படலாம் என்ற அடிப்படையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட இருந்தது. ஆனால், அறிவிப்பு வந்த நாளில் இருந்தே கடும் எதிர்ப்புகளை உள்ளூர் மக்களிடம் இருந்து சந்தித்து வருகிறது நியூட்ரினோ திட்டம்.

திட்டம் குறித்த விவரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை, யார் யாரோடெல்லாம் ஒப்பந்தம் என்பதை வெளியில் கூறவில்லை – என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்தத் திட்டத்தின் மீது வைக்கப்பட்டாலும், பிரதான குற்றச்சாட்டு இதனால் ஏற்படப்போகும் மாசுக்கு யார் பொறுப்பு? – என்பதுதான்.

நியூட்ரினோ ஆய்வுக்காக, அம்பரப்பர் மலையின் அடிவாரத்தில் மலையைக் குடைந்து, 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரத்தில், 2.5 கி.மீ. தூரத்துக்கு ஒரு குகையை அமைப்பது திட்டம். இதற்காக பல ஆயிரம் கிலோ வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சில லட்சம் டன்கள் பாறைகள் உடைக்கப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாறைகள் உலகின் மிக வலுவான பாறைகள் என்பது இங்கு கூடுதல் தகவல்.

அப்போது வெளிப்படும் தூசுகளால் ஏற்படும் மாசை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறார்கள்? அம்பரப்பர் மலைக்கு அருகே உள்ள 12 நீர்த்தேக்கங்கள் நில அதிர்வினால் பாதிப்புக்கு உள்ளானால் பாதுகாப்பு என்ன? ஒரு அறிவியல் திட்டத்துக்காக 8 கோடி ஆண்டுகள் பழமையான மலையை உடைப்பதா?– என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்னும் அரசால் உரிய பதில் தர முடியவில்லை.

மீத்தேன்:

தமிழ்நாட்டின் நெல் களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்திலும், அருகிலுள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் கிணறுகளை அமைத்து மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனத்துடன் கடந்த 2010ல் ஒரு நூற்றாண்டுக்கு ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு. இந்தத் திட்டத்தின்படி பூமிக்கு அடியில் 6 கிலோ மீட்டர் வரையிலான ஆழத்துக்கு தோண்ட தனியார் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியின் நிலத்தடிநீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதன் மூலம் அடுத்த 35 ஆண்டுகளில் ரூபாய் 6.25 லட்சம் கோடி மதிப்பிலான மீத்தேன் கிடைக்கும் என்றது அரசு, ஆனால் அதே பகுதியில் அடுத்த 35 ஆண்டுகளில் நடக்க உள்ள ரூபாய் 35 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயம் இதனால் அழியும் என்றனர் மக்கள்.

மக்களின் இழப்புகளுக்கும், சூழலியல் பாதிப்புகளுக்கு மாற்று இல்லாத சூழலில், நம்மாழ்வார் உள்ளிட்டவர்களின் தொடர் போராட்டங்களாலும், மக்களின் கடும் எதிர்ப்பாலும் 2015ல் இந்தத் திட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தது மத்திய அரசு.

ஹைட்ரோ கார்பன்:

மீத்தேன் திட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்த கையோடு மத்திய அரசு அடுத்து, நாடெங்கும் 67 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, கடந்த 2015 செப்டம்பரில் கூடி முடிவு எடுத்தது. மீத்தேன் வகை வாயுகளின் பொதுப்பெயர்தான் ஹைட்ரோகார்பன். எனவே இதுவும் ஒரு வகையில் மீத்தேன் திட்டம்தான். இந்தத் திட்டத்திலும் நிலத்தடிநீர், நிலம் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த திட்டம் தமிழகத்தின் நெடுவாசலில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்ட மறுநாளே, நெடுவாசல் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டம் 22 நாட்கள் நடைபெற்றது. அதன் பின்னர், இந்தத் திட்டம் கைவிடப்படும் என தமிழக அரசு அளித்த உறுதிமொழியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச அளவிலான 28 நிறுவனங்களிடம் நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், மீண்டும் நெடுவாசலில் பொதுமக்கள் தொடங்கிய போராட்டம் 172 நாட்கள் நடைபெற்றது. மேலும், இத்திட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கால், கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியுடன் இப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி 18-ல் ஒருநாள் அடையாள போராட்டமும் நடத்தப்பட்டிருந்தது. கடந்த மே மாதத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனை கைவிடுவதாகவும், மாற்று இடம் வேண்டும் எனவும் நெடுவாசல் திட்டத்தில் அரசுடன் ஒப்பந்தம் போட்ட தனியார் நிறுவனம் கேட்டு உள்ளது.

ஸ்டெர்லைட்:

தூத்துக்குடியில் 1994ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1996ல் இயங்கத் தொடங்கிய ஸ்டெர்லைட் தாமிர ஆலை, தொடங்கப்பட்ட அடுத்த ஆண்டு முதலே வெளிப்படையான சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நச்சுப்புகை வெளியானது, நீர் மாசுபாடு ஏற்பட்டது என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள்.

தூத்துக்குடி மக்கள் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில், இவ்வாண்டு பிப்ரவரியில் விரிவாக்கப் பணிகளையும் தொடங்கியது ஸ்டெர்லைட். இதற்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டம், 100ஆவது நாளில் பின்னர் வன்முறையில் முடிந்தது. போராட்ட வன்முறை 13பேரைப் பலி கொண்ட பின்னர் ஸ்டெர்லைட்டுக்கான சுற்றுச் சூழல் அனுமதியையும் மின் இணைப்பையும் துண்டித்து இருக்கிறது தமிழக அரசு, ஆனால் இன்னும் மத்திய மத்திய அரசு ‘ஸ்டெர்லைட் வெளியேற்றப்படும்’ – என்று அறிவிக்கவில்லை. இறந்த மக்களுக்கு பிரதமர் ஒரு இரங்கல் கூட வெளியிடவில்லை.

தமிழக அரசியல் கட்சியினர் தொடர்ந்து ‘தமிழகத்தைப் பாலைவனமாக்கும் திட்டங்களையே மத்திய அரசுகள் செயல்படுத்திவருகின்றன’ – என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

உலகம் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறும் நமது மத்திய அரசுகள், தனது மாநிலங்களின் சூழலியல் அவலக் குரலையும் கேட்க வேண்டும் என்பதே இந்த உலக சுற்றுச் சூழல் தினத்தில் தமிழகத்தின் எதிர்பார்ப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com