உலக முட்டை தினம்: மஞ்சள் கருவை தவிர்க்கத்தான் வேண்டுமா? ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கம்

உலக முட்டை தினம்: மஞ்சள் கருவை தவிர்க்கத்தான் வேண்டுமா? ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கம்
உலக முட்டை தினம்
உலக முட்டை தினம்freepik
Published on

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் புரதச்சத்தின்மையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள் சார்ந்த இறப்பு, உடல் வளர்ச்சி, விரைவில் வயது முதிர்வு ஏற்படுதல் போன்றவற்றில் மிக முக்கிய காரணியாக இருக்கிறது புரதச்சத்து குறைபாடு. புரதச்சத்து எளிமையாக கிடைக்கும் ஒரு உணவு, முட்டை.

சாமானியர்களுக்கும் எளிமையாக கிடைக்கும் வகையிலான முட்டையின் சத்துகள் குறித்து விழிப்புணர்வை அதிகப்படுத்தி, அதன்மூலம் ஊட்டச்சத்தின்மை உள்ளிட்ட பிரச்னைகளை தடுப்பதற்காகவே அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலகளவில் ‘முட்டை தினம்’ என கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் உலக முட்டை தினம், இன்று வருகிறது.

இந்த தினத்தில், முட்டையின் நன்மைகள் குறித்தும் அது சார்ந்திருக்கும் நமக்கான அடிப்படையான சில சந்தேகங்கள் குறித்தும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்.

ஒரு பெரிய முட்டையில் (53 கிராம் எடையுள்ள முட்டையில்) உள்ள சத்துகள்: 5 கிராம் நல்ல கொழுப்புச்சத்து இருக்கும். கொலஸ்ட்ரால், 195 மி.கிராம் இருக்கும். சோடியம் 65 கிராம், புரதம் 6 கிராம் இருக்கும். இவையன்றி வைட்டமின் ஏ 10%; வைட்டமின் டி மற்றும் இ 15%; ஃபோலேட் 15%, வைட்டமின் பி-12 50% இருக்கும்.

ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்
ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்

தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?

“நிச்சயம் நல்லதுதான். சொல்லப்போனால் வளரிளம் பருவத்திலுள்ளவர்கள், கர்ப்ப காலத்திலுள்ளவர்கள், சமீபத்தில் குழந்தை ஈன்ற தாய்மார்கள், இளைஞர்களெல்லாம் தினமும் 2 முட்டையின் வெள்ளைக்கரு வரை அதிகபட்சமாக சாப்பிடலாம். 30 வயதை தாண்டிய பிறகு, உடலில் கொலஸ்ட்ரால் சீரற்று போவது போன்ற சூழல்கள் ஏற்படும் என்பதால் அப்போது சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். முடிந்தவரை 30 வயதை கடந்தவர்கள், தினமும் 2 முட்டை எடுத்துக்கொள்ள வேண்டாம். அன்றாடம் ஒரு முட்டை - உரிய உடலுழைப்பு உள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டுமென அறிவுறுத்துவோம். போலவே வாழ்வியல் நோய் பாதிப்புகளான சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை இருப்பவர்கள் தங்களின் மருத்துவரிடம் அறிவுரை கேட்டு, அவர்கள் குறிப்பிடும் அளவுக்கு முட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்”

மஞ்சள் கருவை தவிர்ப்பதுதான் நல்லதா? “அப்படி பொதுவாக சொல்லிவிட முடியாது. உடலில் ஏற்கெனவே கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் நபர்களுக்குத்தான் இது. முட்டையின் புரதத்தில் பெரும்பகுதி அதன் வெள்ளைக் கருவில்தான் இருக்கும் என்பதால், அதை சாப்பிட அதிக ஊக்கப்படுத்துவோம். அது அனைவருக்குமானது. மஞ்சள் கரு, சற்று பலவீனமாக இருப்பவர்கள், அன்றாடம் நிறைய நல்ல உடலுழைப்பு உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அளவு சீராக இருப்பவர்களுக்கானது. ஒரு நாளில் ஒருவர் ஒரு முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை சாப்பிடுகிறார் என்றால், அவர் அந்த கொலஸ்ட்ராலை சமன் செய்ய உடலுழைப்போடும் இருப்பது அவசியமாகிறது”

எந்த நேரத்தில் முட்டை உட்கொள்வது சரி? “காலை மற்றும் மதியம். ஏனெனில் அப்போதுதான் அடுத்தடுத்து நாம் ஏதாவதொரு வேலையில் இருப்போம். முட்டையும், நன்கு செரிமானமாகி அதன் சத்துகள் போதுமான அளவு உட்கரிக்கப்படும். இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை ‘இரவில்தான் நான் சற்று நடக்கிறேன், சாப்பிட்டவுடன் நேரடியாக படுக்கைக்கு செல்ல மாட்டேன், இரவு உணவுக்கும் என் உறக்கத்துக்கும் 1 -2 மணி நேர இடைவெளி இருக்கும்’ என்றெல்லாம் சொன்னால், அவர்கள் அந்நேரத்தில் உட்கொள்வது பரவாயில்லை”

முட்டையை எந்த வடிவத்தில் எடுத்துக்கொள்வது நல்லது? “ஆம்லெட், கலக்கி, பொரியல், வறுத்த முட்டை என பல வடிவங்களில் முட்டை இன்று சமைக்கப்படுகிறது. ஆம்லெட்டிலேயே கூட மசாலா ஆம்லெட், டபுள் ஆம்லெட் என்றெல்லாம் சாப்பிடுகின்றனர். இவை எல்லாவற்றையும்விட, வேகவைத்த முட்டைதான் மிகச்சிறந்தது. வேண்டுமென்றால் ஹாஃப்-பாயிலும் எடுக்கலாம். வேகவைத்த முட்டையையும், சமைத்தவுடன் சாப்பிட்டு பழகவும். அது ஆறிப்போன பிறகு சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் உருவாகும். இதனாலேயே பிரியாணி, பப்ஸ் போன்றவற்றுடன் பரிமாறப்படும் முட்டையை எடுப்பதை தவிர்க்க சொல்வதுண்டு. முட்டையை வேகவைக்கும்போது, அதிகபட்சம் 9 நிமிடங்கள் சீரான வெப்பநிலையில் வேகவையுங்கள். அதற்கு மேல் வைத்துவிடவேண்டாம்” என்றார்.

முட்டையை சமைக்கும் முன், அது கெட்டுப்போகாமல் உள்ளதா என பரிசோதிக்க விரும்பினால், குடுவையொன்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் முட்டையை போடவும். அடிப்பகுதிக்கு செல்லும் முட்டை, நல்ல முட்டை. மிதந்துக்கொண்டே இருந்தால் அது கெட்டுப்போனது. சில முட்டை, நீருக்கு மேலும் கீழுமாய் அசைந்துக்கொண்டே இருக்கும். அவை, ஓரளவு நல்லது. உடனடியாக பயன்படுத்திவிடவும்.

ஆக, முட்டையில் சரியாக சமைத்து சரியான நேரத்தில் சாப்பிட்டால் அது உடலுக்கு நிச்சயம் மிக மிக நல்லது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com