பெண்களின் பாதுகாப்பில் சரியான அக்கறை செலுத்துகிறதா தமிழகம்?

பெண்களின் பாதுகாப்பில் சரியான அக்கறை செலுத்துகிறதா தமிழகம்?
பெண்களின் பாதுகாப்பில் சரியான அக்கறை செலுத்துகிறதா தமிழகம்?
Published on

பெண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாய்மைதான். ஆம், ஒரு குடும்பம் தலைத்தோங்க வேண்டுமென்றால் அந்த வீட்டில் இருக்கும் தாய் என்ற பெண் பொறுப்போடு செயல்பட வேண்டும். அந்த குடும்பத்தை நல்வழியில் செலுத்த வெண்டும். குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளை பொறுமையோடு கையாண்டு வெற்றி பெற வேண்டும்.

அந்த காலத்தில் ஆண்கள் எவ்வளவுதான் பொருட்களை கஷ்டப்பட்டு ஈட்டினாலும் அதன் தேவைகளை அறிந்து பொறுப்புடன் செலவழித்து வழிநடத்துபவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்களின் வெற்றிக்கும் முழுமுதல் காரணமாக விளங்குவது பெண்கள்தான் என்பது உலகறிந்த உண்மை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்றே சொல்லலாம்.

உடலளவில் வலிமை சற்று குறைந்தவர்களாக இருந்தாலும் மனதளவில் ஆண்களை காட்டிலும் பெண்களே திறமைசாலிகளாக இருக்கின்றனர். அதை நாம் பல நேரங்களில் பார்த்து வருகிறோம். அத்தகைய பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்களை அக்காலத் தலைவர்கள் இயற்றி வழிவகுத்து வைத்தனர்.

அதாவது, பெண்களுக்கு சொத்துரிமை, குழந்தை திருமணத் தடைச் சட்டம், பெண்களின் திருமண வயது, வாரிசுரிமைச் சட்டம், விதவைகள் மறுமணச் சட்டம், மகப்பேறு நலச்சட்டம், வரதட்சணை ஒழிப்புச் சட்டம், பெண் சிசு கொலைக்கு எதிரான சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை என பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன.

எத்தனை சட்டங்கள் இருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மட்டும் குறைந்தபாடில்லை. சமீபத்தில் கூட தமிழகத்தில் பெண்சிசு கொலைகளும், சிறார் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அரங்கேறின. பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் அந்த வழக்கிலும் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

இதனிடையே தற்போதைய பட்ஜெட்டில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 75 கோடி ரூபாய் ஒதுக்கி பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்களின் பாதுகாப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எந்த தரவு அடிப்படையில் தமிழகம் முதலிடம் எனக் கூறினார் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து, வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறும்போது “பெரியார் சொன்ன சமத்துவத்தை இன்னும் அடையவில்லை. பல நேரங்களில் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பலவிதமான வன்முறையும் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. பாதுகாப்பான சூழலில் அவர்கள் இல்லை. ஏட்டளவில் மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். புதுமையாக எதுவும் செய்யவில்லை. பெண்கள் மீது இழைக்கப்படும் குற்றங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதே இல்லை. புகார் தெரிவிக்கவே தயங்குகிறார்கள். அதனால் புள்ளிவிவரங்களை வைத்து மட்டுமே பேசக்கூடாது. அரசு அறிவிக்கும் திட்டங்கள் முழுமையாக அவர்களுக்கு சென்று சேருவதில்லை” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், “பெண்களுக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் பெண்களுக்கான தனித்திட்டங்கள் என்ன இருக்கு? நிர்பயா நிதியை பொருத்தவரை கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை தமிழக அரசு எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை. இப்போதுதான் 13 புரொபஸல்ஸ் அனுப்பியுள்ளார்கள். ஒரு வருஷத்தில் 10 ஆயிரம் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடக்கின்றன. முதன்மை மாநிலம் என முதல்வர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் யார் உண்மையான குற்றவாளிகள் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. பொள்ளாச்சி மக்களுக்கே அது தெரியும். அவர்களை நோக்கி காவல் கரங்கள் செல்லவே இல்லை. அது தொடர்பாக அரசு எதுவும் செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com