"கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெறுங்கள்!" - சிக்கலுக்கு வித்திட்ட சர்ச்சைக் கருத்து

"கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெறுங்கள்!" - சிக்கலுக்கு வித்திட்ட சர்ச்சைக் கருத்து
"கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெறுங்கள்!" - சிக்கலுக்கு வித்திட்ட சர்ச்சைக் கருத்து
Published on

இந்திய சுதந்திரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

"பிரிட்டிஷாரின் நீட்சிதான் காங்கிரஸ். 1947-ல் பெற்றது சுதந்திரம் அல்ல, அது பிச்சை. 2014-ல் தான் எங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. பிச்சை எடுத்து சுதந்திரம் வந்தால், அது உண்மையான சுதந்திரமாக இருக்க முடியுமா?" என்று சமீபத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கங்கனாவுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், தற்போது அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பலர் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருவதால் கங்கனாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, ``கங்கனா தெரிவித்த இந்த மூர்க்கத்தனமான கருத்துகள் அதிர்ச்சியூட்டுகிறது. மகாத்மா காந்தி, நேரு மற்றும் சர்தார் படேல் தலைமையிலான துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையிலும், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் போன்ற பல புரட்சியாளர்களின் தியாகத்தை இழிவுபடுத்தும் வகையிலும் கங்கனாவின் கருத்து அமைந்துள்ளது. எனவே, அவருக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை திரும்பப் பெற வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்துகிறேன். இதுபோன்ற விருதுகளை வழங்குவதற்கு முன், விருது பெறுபவர்களின் மனநலத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற நபர்கள் நமது தேசத்தையும் நமது மாவீரர்களையும் அவமதிக்க மாட்டார்கள்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

இவரைப் போல் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மஞ்சி போன்றோர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பீகாரில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள ஜிதன் ராம் மஞ்சி, ``இனிமேல் அனைத்து செய்தி சேனல்களும் கங்கனாவை புறக்கணிக்க வேண்டும். அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் காந்தி, நேரு, படேல், பகத்சிங், சாவர்க்கர் போன்றோர் விடுதலைக்காக மன்றாடியதாக உலகம் நினைக்கும்" என்று கூறியுள்ளார்.

சிவசேனா ஒருபடி மேலே சென்று கங்கனா மீது தேசத் துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. சிவசேனா தலைவர் நீலம் கோர்ஹே என்பவர், ``கங்கனாவின் கருத்துகளுக்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது பத்ம விருதையும் திரும்ப பெற வேண்டும்" என்றுள்ளார்.

சிவசேனாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸும் கடுமையான கண்டங்களை கங்கனாவுக்கு எதிராக பதிவு செய்துள்ளது. ``கங்கனா சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதித்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்பப் பெற்று அவரைக் கைது செய்ய வேண்டும்" என்று தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும் அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஆம் ஆத்மி கங்கனா மீது போலீஸில் புகார் கொடுத்துள்ள நிலையில், அவரின் பத்ம விருதையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாகி வருகிறது.

பாஜகவும் கண்டனம்: கங்கனா, 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தான் சுதந்திரம் கிடைத்தது என்கிற ரீதியில் பேசிய நிலையில் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர், இந்தக் கருத்தை கண்டித்ததுடன், கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார். ``நான் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மகன் என்பதாலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதாலும் கங்கனாவின் கருத்துகளை கடுமையாக எதிர்க்கிறேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது என்று கங்கனா ரனாவத் கூறியது சுதந்திரத்தை (பேச்சுரிமையை) மிகப்பெரிய தவறாகப் பயன்படுத்துவதாகவும், தியாகத்தை அவமதிப்பதாகவும் நான் கருதுகிறேன்.

கங்கனாவின் கருத்து மோசமானது. இந்தப் பேச்சால் ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பமும் காயமடைந்துள்ளது. எனவே சட்டரீதியாக கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் பிரவீன் ஷங்கர் கபூர்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com